காணிப் பிரச்சினைகளுக்கு 6 மாதத்திற்குள் தீர்வு

அம்பாறை மாவட்டத்தில் நீண்ட காலமாக நிலவிவரும் காணிப் பிரச்சினைகளுக்கு 06மாத காலத்திற்குள் தீர்வு வழங்கப்படுமென ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் தெரிவித்தார். 

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டம் அக்கரைப்பற்று நகரில் புதன்கிழமை (06) மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். 

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் அங்கு தொடந்து உரையாற்றுகையில், 

தற்போது முஸ்லிம் சமூகத்தினர் வியாபாரம் சார்ந்த பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இப் பிரச்சினைக்கு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தீர்வு பெற்றுத் தருவேன் என வாக்குறுதியளித்துள்ளார். 

அம்பாறை மாவட்ட மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு உரியவர்களுக்கு பகிர்ந்தளிக்க புதிய அரசாங்கத்தில் தீர்வு வழங்கப்படும். 

கடந்த ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் சமூகத்தினர் கடுமையான பிரார்த்தனைகளுக்கு மத்தியில் தற்போதைய ஜனாதிபதியை கொண்டு வந்தார்கள். இவ்வாறு கொண்டு வந்தும் கூட எவ்வித பலனுமில்லை. இதேபான்று பலனில்லாத ஒரு ஜனாதிபதி கொண்டு வரக் கூடாது என்பதற்காகத்தான் தற்போது ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் எத்தி வைத்தோம். அதனை நிறைவேற்றித் தருவதாக அவர் உறுதியளித்துள்ளார். 

சிறுபான்மை சமூகத்திற்கு நன்மை பயக்கக் கூடிய அரசாங்கத்தை ஏற்படுத்தி அதனூடாக எதிர்காலத்தில் எமது இளைஞர்கள், யுவதிகள் முகங்கொடுக்கக் கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண வழியமைப்போம். 

ஒலுவில் துறைமுகப் பிரச்சினை தொடர்பாக நிரந்தரத் தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கு நாங்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் பேசியுள்ளோம். இதற்கு எதிர்வரும் 22ம் திகதி செயற்குழு ஒன்றினை நியமித்து அதனூடாக நிரந்தர தீர்வு வழங்கப்படும். 

(ஒலுவில் விசேட நிருபர்)

Sat, 11/09/2019 - 09:01


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை