48 மணி நேர அமைதிக் காலப் பகுதியில் விதிமுறைகளை மீறினால் சட்டம் பேசும்

வரம்பு மீறிச் செயற்படும் ஊடகங்களின் உரிமம் இரத்து

ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்கள் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்த நிலையில் 48 மணி நேர அமைதிக் காலப் பகுதியில் தேர்தல் விதிகளை மீறிச் செயற்படுபவர்களை கைது செய்ய பொலிஸ் மாஅதிபரை பணித்திருக்கிறேன். வரம்பு மீறி செயற்படும் ஊடகங்களின் உரிமங்களை இரத்துச் செய்யவும் தீர்மானித்திருக்கிறோம் என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். கடந்த காலங்களைப் போன்று வன்முறைச் சம்பவங்கள் எதுவுமே இந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இடம்பெறவில்லை. வேட்பாளர்களும், பொது மக்களும் ஓரளவுக்கேனும் பொறுப்பாக நடந்து கொண்டிருக்கிறார்கள் எனவும் சுட்டிக்காட்டினார்.அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று மாலை இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புபட்ட இறுதி ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு மேலும் கூறுகையில்,

வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல் ஆரம்பித்த பிரசாரப் பணிகள் நேற்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்துவிட்டது.

அடுத்த 48 மணி நேர அமைதிக் காலத்தில் பகிரங்கமாகவோ, மறைமுகமாகவோ வேட்பாளர்களுக்காக ஆதரவு தேடும் முயற்சிகளில் யாராவது ஈடுபடுவார்களானால் அவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள். குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் நீதிமன்றத்தின் மூலம் அதிகபட்ச தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும். தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்தி முடிக்க சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.

16ம் திகதி மாலை 5 மணிக்குப் பின்னர் தபால் மூல வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பிக்கப்படும். அன்று நள்ளிரவு 12 மணியாகும் போது முதலாவது தபால் மூலமான தேர்தல் முடிவு வெளியிட முடியும்.

எவ்வாறெனினும் மாலை 5 மணிக்கு முன்னர் ஊடகங்களை வைத்து தேர்தல் முடிவுகளை எவரும் வெளியிடக் கூடாது. அவ்வாறு நடந்து கொள்ளும் ஊடக நிறுவனங்களின் தனியார், அரச இலத்திரணியல் ஊடகங்கள், சமுக வலைத்தளங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த இடைப்பட்ட காலத்திலாவது ஊடகங்கள் நேர்மையாகச் செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தவறாக நடக்கும் ஊடகங்கள் தொடர்பாக ஆணைக்குழு உறுப்பினர்கள் மூவரும் கையொப்பமிட்டு எழுத்து மூலம் கேட்டுக் கொண்டால் அந்த ஊடக நிறுவனங்களின் உரிமத்தை இரத்துச் செய்ய தயாராக இருப்பதாக தொலை தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த அமைதிக் காலப் பகுதியில் இணையங்கள், சமூக ஊடகங்கள், சமூக வலையமைப்புகள் அனைத்தும் தேர்தலோடு தொடர்புபட்ட விளம்பரங்களை உடனடியாக அகற்றிக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்ய மறுக்கும் ஊடகங்களுக்கு உத்தியோகபூர்வ முடிவுகள் பெற்றுக்கொடுக்கப்படமாட்டாது.

வாக்களிப்பு தினத்தில் ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திலும் ஆயுதம் தரித்த இரண்டு பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்படுவார். கூடுதல் வாக்காளரைக்கொண்ட பிரதேசத்தில் ஐந்து முதல் ஆறு பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படுவர்.

இவற்றுக்கு மேலதிகமாக அவசியப்படும் பட்சத்தில் இராணுவத்தின் உதவியும் பெறப்படும். அத்துடன் விசேட அதிரடிப்படையினருடன் கூடிய விசேட ரோந்து நடவடிக்கையும் முன்னெடுக்கப்படும். கலகத்தடுப்புப் பிரிவு தொடர்ந்து உஷார் நிலையில் வைக்கப்படடுள்ளது. கலவரங்கள், வன்முறைகள் இடம்பெறுமானால் துப்பாக்கிப் பிரயோகம் செய்யும் அதிகாரம் பொலிஸாருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

மாலை 5 மணிக்குப் பின்னர் அனைத்து வாக்கெண்ணும் நிலையங்களும் அமைந்துள்ள பிரதேசங்கள் கடும் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அனுமதிக்கப்பட்டவர்கள் மாத்திரமே அப் பகுதிக்குள் செல்ல முடியும். அனைத்துத் தேர்தல் முடிவுகளும் வெளியிடப்பட்ட பின்னரும் தொடர்ந்து ஒருவார காலத்துக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் நீடித்திருக்கும். தேர்தல் முடிவு வெளியாகி ஒருவாரம் வரை எந்தவித ஊர்வலங்கள்,கூட்டங்களும் நடத்த முடியாது என்றார்.

 

எம்.ஏ.எம். நிலாம்

Thu, 11/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை