பாதுகாப்பு என்ற பெயரில் மக்களுக்கு வீண் அச்சுறுத்தல்

பாதுகாப்பு என்ற பெயரில் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் மக்களை அச்சத்துக்குள்ளாக்கி வருகின்றனர். நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அனுபவமும், திறமையும், பலமும் மிக்க என்னால் நாட்டையும், மக்களையும் பாதுகாக்க முடியும் என தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தெரிவித்தார்.

அமைச்சரவையின் எண்ணிக்கையை 20 ஆகக் குறைக்கப் போகிறேன். நாட்டின் வீண்விரயங்களை இல்லாதொழித்து அதன்மூலம் மக்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்ற முடியும். கொழும்பு -07 புதிய நகர மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற தேசிய மக்கள் கட்சியின் இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

இந் நாடு கடந்த 71 வருடமாக மக்களை அடிமைகளாகவும் ஆட்சியாளர்கள் பிரபுக்களாகவும் இருந்து மக்களை நடத்தியமையே தொடர்ந்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்ததன் பின்னர் தலைவர்கள் மதம், இனம் மக்களைப் பிரித்தார்கள். தொடர்ந்தும் பிரித்து செயற்பட்டதால் மக்கள் மத்தியில் நல்லிணக்கமும் ஒற்றுமையும் இல்லாமல் போனது.

எமது ஆட்சியில் நாம் இலங்கையர் என்ற ஒரே குடும்பத்தின் மக்களாகவே அனைவரையும் பார்ப்போம். நாட்டில் சிறுபான்மை என எவரும் கிடையாது. பெரும்பான்மையான மக்கள் என்ற குடும்பத்தில் எண்ணிக்கையில் சிறுபான்மையாக உள்ள மக்கள் இணைந்துகொண்டால் மட்டுமே ஒரே நாடு என்ற வகையில் இலங்கையைக் கட்டியெழுப்ப முடியும்.

இதுவரை நாட்டை ஆட்சி செய்தவர்கள் அவ்வாறு செய்யவில்லை. இந் நாட்டில் இனியும் ஆயுதம் ஏந்தும் நிலை வராது. யுத்தம் ஏற்படாது அவ்வாறான ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவது எனது பொறுப்பாகும்.

தேர்தல் காலங்களில் நாம் மக்கள் மத்தியில் முன்வைக்கும் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம். புதிய அரசியல் கலாசாரமொன்றை ஏற்படுத்துவதே எனது நோக்கம் என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 11/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை