இந்தியா 400மில்.டொலர் கடன் உதவி; பயங்கரவாத ஒழிப்புக்கு 50மில். டொலர்

வெற்றிகரமான குறிக்கோளுடன் இலங்கையின் புதிய ஜனாதிபதி தமது வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு இந்திய அரசாங்கம் பூரண ஒத்துழைப்பை வழங்குமென பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார். 

அதற்கமைய, 400மில்லியன் அமெரிக்க டொலர்களை இலகு கடனுதவியாக விரைவில் இலங்கைக்கு பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பிரதமர் குறிப்பிட்டார்.  

அத்துடன், பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக மேலும் 50மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலகு கடனுதவியாக இலங்கைக்கு வழங்கப்படுமெனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.  

இந்தியப் பிரதமரின் ஐதராபாத் மாளிகையில் நேற்று நடைபெற்ற இருநாட்டு அரச தலைவர்களுக்குமிடையிலான சந்திப்பின்போதே இந்திய பிரதமர் மோடி இதனைக் கூறினார்.  

தமது அழைப்பையேற்று இலங்கையின் புதிய ஜனாதிபதி தனது முதலாவது வெளிநாட்டு அரச முறைப் பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்தமையை அண்டைய நாடு என்ற வகையில் தமது நாட்டிற்கு கிடைக்கப்பெற்ற கௌரவமாக கருதுவதாக தெரிவித்த மோடி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பெற்றுக்கொண்ட வெற்றி தொடர்பில் மகிழ்ச்சி தெரிவித்ததோடு, ஒட்டுமொத்த இந்திய மக்களின் சார்பாகவும் ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார். 

இரு நாடுகளுக்குமிடையே காணப்படும் நீண்டகால நட்புறவு, பொருளாதார, அரசியல் மற்றும் சமூக தொடர்புகளை முன்னோக்கி கொண்டு செல்வது தொடர்பில் அரச தலைவர்கள் இதன்போது கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். 

இருநாடுகளினதும் பாதுகாப்பிற்கு முன்னுரிமையளித்து செயற்படுதல் தொடர்பிலும் அரச தலைவர்கள் நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டதோடு, இரு நாடுகளும் பொருளாதார ரீதியில் நெருங்கிய ஒத்துழைப்புடன் செயற்படுவது தொடர்பாகவும் இருதரப்பு வர்த்தக அபிவிருத்தியின் தேவை குறித்தும் விசேட கவனம் செலுத்தினர்.  

நீண்டகால பிரச்சினையாக காணப்படும் இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன் தடுத்து வைத்துள்ள அனைத்து இந்திய மீன்பிடி படகுகளையும் விடுவிக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

இலங்கையில் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுமென நம்புவதாக தெரிவித்த பிரதமர் மோடி, வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்து மாகாணங்களின் அபிவிருத்தி குறித்தும் கவனம் செலுத்தினார்.

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளுமாறு தனக்கு வழங்கப்பட்ட அழைப்பிற்கு நன்றி தெரிவித்ததோடு, இந்திய பிரதமரையும் இலங்கைக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தார். மேலும் இந்தியாவுடன் நெருங்கிய பொருளாதார ஒத்துழைப்புடன் செயற்பட விரும்புவதாகவும் ஜனாதிபதி இந்திய பிரதமரிடம் தெரிவித்தார். 

இக்கலந்துரையாடலின் பின்னர் அரச தலைவர்கள் இருவரும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர். 

பிரதமர் மோடி கருத்து தெரிவிக்கையில், இன ஒற்றுமை தொடர்பான தனது அரசியல் நிலைப்பாட்டை இலங்கை ஜனாதிபதி எனக்குக் கூறினார். தமிழர்களின் சமத்துவம், நீதி, சமாதானம், மரியாதை தொடர்பான அபிலாஷைகளை எதிர்கொள்ளும் வகையிலான நல்லிணக்க நடைமுறையை இலங்கை அரசு மேற்கொள்ளுமென நான் நம்புகிறேன் என்றும் மோடி தெரிவித்தார்.

அத்துடன் நல்லிணக்க நடைமுறையில், பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது பற்றியும் உள்ளடக்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்ைக தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் பேசுகையில், இலங்கை, -இந்திய உறவு இரு நாடுகளுக்கும் அப்பாற்பட்ட பிராந்திய ரீதியானது. அபிவிருத்தியும் சுபீட்சமும் நிறைந்த இலங்கையொன்றை உருவாக்க வேண்டுமென இந்தியா மட்டுமன்றி இந்து சமுத்திர பிராந்தியமே விரும்புகின்றது. 

இந்தியா, பூகோள ரீதியாக இலங்கைக்கு மிக நெருக்கமான நாடு மட்டுமன்றி நம்பிக்கைக்குரிய நட்பு நாடாகவும் விளங்குகின்றது. எமது வரலாறு, இனம்,மொழி,கலாசாரம்,குடியேற்றங்கள் என்பன இரு நாடுகளதும் நெருக்கமான உறவுகளின் உறுதியான அடிப்படை ஆதாரங்கள். 

பூகோளரீதியாக எமக்கு மிக நெருக்கமான நாடு என்றதன் அடிப்படையிலும் 'எஸ்.எ.ஜி.எ.ஆர்' பிரகடனம் அடிப்படையிலும் நாம் இலங்கைக்கு முன்னுரிமை வழங்குகின்றோம். எமது இரு நாடுகளது பாதுகாப்பும் அபிவிருத்தியும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதவை. அதனால் நாம் ஒருவருக்கொருவர் எமது பாதுகாப்பு தொடர்பில் அக்கறை செலுத்தவேண்டிய தேவையில் உள்ளோம். 

இன்று நானும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் இருதரப்பு உறவுகள், சர்வதேச விவகாரங்கள், பல்தரப்பு ஆர்வங்கள் என்பன குறித்து ஆராய்ந்தோம். இருநாடுகளுக்குமிடையிலான உறவை கட்டியெழுப்புவோமென நாம் இதன்போது உறுதி பூண்டோம். இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் இந்தியா அர்ப்பணிப்புடன் செயலாற்றுமென நான் ஜனாதிபதியிடம் உறுதியளித்தேன். புதிதாக வழங்கப்படவுள்ள 400மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியானது இலங்கையின் அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதாக அமையும். வடக்கு, கிழக்கில் இந்திய நிதியுதவியின் கீழ் அமைக்கப்பட்ட 46ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டிருப்பதையிட்டு நான் பெருமையடைகின்றேன். அதேபோன்று மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவளி மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுவரும் 14ஆயிரம் வீடுகளும் தற்போது முன்னேற்றகரமான நிலையில் உள்ளன. இதனடிப்படையில் பயங்கரவாதத்துக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக இந்தியா, இலங்கைக்கு 50மில்லியன் டொலர்களை வழங்குவதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். 

இதனைத் தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி வழங்கிய விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஐதராபாத் மாளிகையிலுள்ள விசேட அதிதிகளின் குறிப்பேட்டிலும் நினைவுக் குறிப்பொன்றை பதிவு செய்தார். 

Sun, 12/01/2019 - 11:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை