ரணில் விட்டுக்கொடுப்பு; எதிர்க்கட்சி தலைவராகிறார் சஜித் பிரேமதாச

பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சஜித் பிரேமதாசவுக்கு விட்டுக்கொடுக்க ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்திருப்பதாக ஐக்கிய தேசிய முன்னணி வட்டாரம் நேற்றுத் தெரிவித்தது.  

ஐக்கிய தேசிய முன்னணியில அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் கடந்த இரண்டு தினங்களாக கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தொடர் சந்திப்புக்களை மேற்கொண்டு ஐ.தே.கவின் உட்கட்சிப் பூசலை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியிலீடுபட்டனர்.  

இந்த முயற்சியில் தமிழ் முற்போக்கு முன்னணி தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன், ஹெல உறுமய தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் தீவிரமாகச் செயற்பட்டனர்.  

ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்த விடயத்தில் தொடர்ச்சியாக காலம் கடத்துவதாகவும், கட்சிக்குள் நெருக்கடிகளை அதிகரிப்பதற்கே இது வழிவகுப்பதாகவும் சுட்டிக்காட்டியிருக்கும் முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் எதிர்காலத்தில் ஐக்கிய தேசிய முன்னணியின் இணக்கப்பாட்டையும் இது கேள்விக்குள்ளாக்கலாம் என எச்சரித்துள்ளனர்.  

இந்த நிலையில் நேற்றுக் காலை கட்சிகளின் தலைவர்கள் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து இனியும் காலம் கடத்த முடியாது உறுதியான முடிவொன்றை எடுக்குமாறு வலியுறுத்தியதோடு கட்சித் தலைமைத்துவத்தை சஜித் பிரேமதாசவுக்கு விட்டுக்கொடுக்குமாறும் கேட்டுக்கொண்டனர்.  

இதன்போது நீண்டநேர கலந்துரையாடலின் பின்னர் சஜித் பிரேமதாசவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைமைப் பதவியிலிருந்து நேரம்வரும்போது விலகத் தயாரென அவர் மேலும் கூறியிருக்கின்றார்.  

ரணில் விக்கிரமசிங்கவின் பிடிவாதப் போக்கை விரும்பாத நிலையிலும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் தற்போதைக்கு விட்டுக்கொடுத்துப் போகும் எண்ணத்  தில் சஜித் பிரேமதாசவிடம் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை மட்டும் ஏற்றுக்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கி இணங்க கண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.  

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் வரை தலைமைப் பதவியில் ரணில் விக்கிரமசிங்க தொடரவும் பொதுத் தேர்தல் வரை பொறுத்துப்போகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிய வருகின்றது.  

நாளை மறுதினம் திங்கட்கிழமை கூடும் ஐக்கிய தேசிய முன்னணி பாராளுமன்றக் குழுக்கூட்டத்தின்போது இந்தத் தீர்மானம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு சஜித் பிரேமதாசவின் பெயரை உறுதிப்படுத்தி ஐ.தே.க. செயலாளர் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் ஐக்கிய தேசிய முன்னணி வட்டாரம் தெரிவித்தது.

எம்.ஏ.எம். நிலாம்  

Sat, 11/30/2019 - 09:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை