சஜித்தின் 19வருடகால அரசியலில் கோட்டாவின் பெயரை உச்சரிக்கவில்லை

மறுக்க முடியாதென்கிறார் அநுர

சஜித்தின் 19 வருட கால பாராளுமன்ற ஹன்சாட்டைப் படித்துப் பாருங்கள். அதில் 'கோட்டாபய' என்ற பெயரை எங்காவது அவர் சொல்லி இருந்தால் காட்டுங்கள் பார்ப்போம் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசநாயக்க கேள்வி எழுப்பினார்.

கிண்ணியாவில் செவ்வாக்கிழமை (29) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், தற்போது தேர்தல் மேடைகளில் 'கோட்டாபய' என்ற பெயரை உபயோகிக்கிறாரா?

எனது எதிர்த்தரப்பு வேட்பாளர் என்று தான் சொல்கிறார்.

பெயரைச் சொல்லமாட்டார்கள். இவர்கள் உற்ற நண்பர்கள்.

எமக்குக் காட்டுவதற்காக போலியாக பீதியை உருவாக்குகிறார்கள். நாட்டு மக்கள் இப்போது ஏழைகளாக இருக்கிறார்கள். ஆனால், அரசியல் வாதிகள் பல கோடிகளுக்கு சொந்தக்காரர்களாக மாறி இருக்கின்றார்கள். இந்த நிலையில் நாடு அபிவிருத்தி அடைந்ததாக கருத முடியுமா? நாடு இப்போது வறுமைக்கோட்டின் கீழ் சென்று கொண்டிருக்கின்றது .இதற்கு யார் காரணம் நாம் உருவாக்கிய ஆட்சியாளர்களே என்று தெரிவித்த அவர், இந்த நாட்டு மக்களின் சொத்துக்களை சூறையாடினார்கள் வீண்விரயம் செய்தார்கள் தங்களுடைய குடும்பத்தையும் கோத்திரத்தையுமே வளர்த்தார் என்றும் தெரிவித்தார்.

நாங்கள் கொலைகாரர்களுக்கும் கொள்ளைக்காரர்களுக்கும் வாக்களித்து இருக்கிறோம். இன்னுமா வாக்களிக்கப் போகிறோம் சிந்தித்துப்பாருங்கள்.

இந்த தடவை நாட்டின் ஆட்சியை எங்களுக்கு தந்து பாருங்கள். இந்த நாட்டை எவ்வாறு கட்டியெழுப்ப முடியும் என்பதை செய்து காட்டுகிறோம் என கேட்டுக் கொண்டார்.

நாட்டின் நீதித்துறை தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கும் போது , ஏழை, பணக்காரன், ஆட்சியாளன் என்ற வேறுபாடின்றி சட்டம் எல்லோருக்கும் சமமாக பிரயோகிக்கப்பட வேண்டும்.

சிறையில் இருப்பவர்கள் ஏழைத்தாய் தந்தைகளின் பிள்ளைகள். ஆனால் மக்களின் சொத்துக்களை பாரியளவில் கொள்ளையடித்தவர்களும் கொலைகாரர்களும் சிறையில் இல்லை.

எமது நாட்டுப் போலிஸ்காரர்களுக்கு திருடர்களை தேடி பிடிக்க திறமை உண்டு. ஆனால் லசந்த எக்னெலிகொட, தாஜுதீன் ஆகியோர்களை கொன்றவர்களை தேடிக் கண்டு பிடிக்க முடியாதுள்ளது.

சிரச மற்றும் சியத்த நிறுவனத்துக்கு குண்டு போட்டவர்களையும் உதயன் பத்திரிகைக்கு தீவைத்தவர்களையும் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை. உபாலி தென்னகோன், கீத் நொயல், போத்தல, ஜெயந்த பெரேரா ஆகியோர்களை கடத்தியவர்களை போலிசாரால் கண்டுபிடிக்க முடியாதுள்ளது.

இவை அனைத்தும் போலிசாருக்குத் தெரியும். போலிசாரிடம் திறமை இருக்கின்றது. ஆனால் அந்தக் கொலையை அரசாங்கம் செய்ததினால் அவர்களை தேடி கண்டுபிடிக்க முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு போலிசார் உள்ளனர்.

விமல் வீரவன்ச அமைச்சராக இருந்த காலத்தில் அவருடைய வீட்டுக்கு ஒரு மாதகால மின் கட்டணமாக 20 இலட்சம் ரூபாய் செலுத்தப்பட்டது. அவ்வாறே கெஹெலிய ரம்புக்வெல அமைச்சராக இருந்தபோது ஒரு மாத கால மின் கட்டணமாக 19 இலட்சம் ரூபாய் செலுத்தப்பட்டது. இதனை அரசாங்கமே செலுத்தியது. 130 கோடி மக்கள் வாழும் சீனாவில் 27 அமைச்சர்கள். ஆனால் 2 கோடி மக்கள் வாழும் இலங்கையில் 100 அமைச்சர்கள். இப்படி என்றால் எவ்வாறு எமது நாட்டை அபிவிருத்தி செய்வது?

ரணில் விக்ரமசிங்க, ரவி கருணாநாயக்க ஆகியோர் கொள்ளையிட்ட மத்திய வங்கி பணத்தையும், மஹிந்த ராஜபக்ச சீன நிறுவனங்களிடமிருந்து பெற்ற பணத்தையும், கோட்டாபய மிக்விமான கொள்வனவில் கொள்ளையடித்த பணத்தையும் இரண்டு மாதங்களுக்குள் மக்களுக்கு மீட்டி தருவோம் என்றும் தெரிவித்தார்.

கிண்ணியா மத்திய நிருபர் -

Fri, 11/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை