ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பெறுபேறுகள் நேற்று வெளியாகின

கல்கமுவ மாவோ வித்தியாலய மாணவனுக்கு 199 புள்ளி

வவுனியா மாணவி தரணியா 192

திருமலை விக்னேஸ்வரா மாணவன் தேனுவர்சன் 197

யாழ்.இந்து ஆரூஷன் 196

யாழ்.பொஸ்கோ தர்ஷன் 194

 

ஐந்தாம் ஆண்டுபுலமைப்பரிசில் பெறுபேறுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதற்கிணங்க திருகோணமலை ஸ்ரீவிக்னேஸ்வரா கல்லூரி மாணவன் சசிகாந்தன் தேனுவர்சன் 197 புள்ளிகளைப் பெற்று அம் மாவட்டத்தில் சாதனை படைத்துள்ளார்.

இதேவேளை, சிங்கள மொழி மூலம் கல்கமுவ ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க வித்தியாலய மாணவன் அதீஸ் நெத்தும் 199 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

அத்துடன் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளில் தமிழ்மொழியில் யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் யோகநாதன் ஆரூசன் 196 புள்ளிகளையும், யாழ். ஜோன் பொஸ்கோ கல்லூரி மாணவன் கேசவன் தர்ஷன் 194 புள்ளிகளையும் பெற்றுள்ளனர்.

இதேவேளை, வவுனியா புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலய மாணவி தரணியா விவேகானந்தராசா 192 புள்ளிகளைப் பெற்றுள்ளார். அப்பாடசாலையில் 56 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியதுடன் அதில் 32 பேர் சித்தியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று மாலை வரை ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பெறுபேறு தொடர்பான உத்தியோகபூர்வ பெறுபேற்று முடிவுகளெதுவும் வெளியிடப்படாத நிலையில் அந்தந்த மாவட்டங்களிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே மேற்படி நான்கு மாணவர்களும் சித்திபெற்றுள்ளமை அறியக்கிடைத்தது.

இதேவேளை, மாணவர்கள் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களில் சரியான சுட்டெண்களை உள்ளிட்டு பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இம்முறை ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசிலுக்கு 339,410 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றதுடன் அதில் 332,179 பேர் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.

இம்முறை ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசிலுக்கான மாணவர் எண்ணிக்கை 5,000 த்தால் அதிகரிக்கப்பட்டு 20,000 மாக உயர்த்தப்பட்டுள்ளது. அதில் 250 புலமைப் பரிசில்கள் விசேட தேவையுடையோர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இம்முறை பெறுபேறுகள் தயாரிக்கும் போது நாடளாவிய அல்லது மாவட்ட ரீதியில் Rank வழங்கப்படாமை விசேட அம்சமாகும்.

எந்தவொரு மாணவரினதும் புள்ளி தொடர்பாக மீள் பரிசீலனைக்கான அவசியமிருந்தால் இம் மாதம் 29 ஆம் திகதிக்கு முன்பதாக பாடசாலை அதிபர்களுக்கூடாக மேன்முறையீடு செய்ய முடியும் என்றும் பரீட்சைத் திணைக்களம் மாணவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 10/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை