சிரியாவில் துருக்கி படை நடவடிக்கைக்கு வழிவிட்டு அமெரிக்க துருப்புகள் வாபஸ்

சிரியாவில் அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியான குர்திஷ் போராளிகளுக்கு எதிராக துருக்கி படை நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்திருக்கும் நிலையில் அமெரிக்கா அதில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக அறிவித்துள்ளது.

சிரியாவில் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவை வீழ்த்துவதில் குர்திஷ்கள் முக்கிய பங்கு வகித்தபோதும், அந்தப் போராளிகளை துருக்கி தீவிரவாதிளாக கருதுகிறது.

துருக்கி மற்றும் சிரிய எல்லையில் நூற்றுக்கணக்கான துருப்புகளை நிலைநிறுத்தி இருக்கும் அமெரிக்கா, அந்த துருப்புகளை அங்கிருந்து வாபஸ் பெற ஆரம்பித்துள்ளது.

அமெரிக்க படைகளை வாபஸ் பெறுவது குறித்து கண்டனம் வெளியிட்டிருக்கும் குர்திஷ் போராளிகள் அமெரிக்கா போராளிகளை கைவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

குர்திஷ் படைகள் மீது தாக்குதல் நடத்தினால் துருக்கி பொருளாதார ரீதியில் பேரழிவை சந்திக்க வேண்டி இருக்கும் என்று டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் அமெரிக்கா இந்த விடயம் குறித்து ஞாயிறன்று வெளியிட்ட அறிவிப்பில் குர்திஷ்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் இடையிலான பேச்சுவார்த்தையை தொடர்ந்தே இந்த அறிவிப்பு வெளியாகி இருந்தது.

“வடக்கு சிரியாவில் நீண்ட காலம் திட்டமிட்டிருந்த படை நடவடிக்கையை துருக்கி முன்னெடுக்கவுள்ளது” என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

“இந்த படை நடவடிக்கையில் அமெரிக்கா பங்கேற்கவோ அல்லது அதற்கு ஆதரவளிக்கவோ இல்லை என்பதோடு ஐ.எஸ் பகுதிகளில் ‘கலீபத்தை’ தோற்கடித்த அமெரிக்கப் படைகள் உடன் அங்கிருந்து விலகிக்கொள்ளும்” என்றும் அமெரிக்காவின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் குர்திஷ் படைகள் மூலம் பிடிக்கப்பட்ட ஐ.எஸ் உறுப்பினர்களை துருக்கி முழுமையாக பொறுப்பேற்கும் என்று அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

சிரியாவில் குர்திஷ்களால் நடத்தப்படும் முகாம்களில் பிடிபட்ட ஆயிரக்கணக்கான ஐ.எஸ் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் மனைவியர், குழந்தைகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

“மேலும், இரண்டு வருடங்களாக கைது செய்யப்பட்ட இஸ்லாமிய அரசு குழுவின் கைதிகளை துருக்கி பொறுப்பேற்றுக் கொண்டது.

பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் அவர்கள் நாட்டிலிருந்து வந்த ஐ.எஸ். போராளிகளை திரும்பப்பெறுமாறு நாங்கள் கேட்டபோது அந்த நாடுகள் அதை மறுத்துவிட்டன.

எங்களுக்கு அதிகம் செலவாகும் என்பதால் நாங்கள் அவர்களை நீண்டகாலம் வைத்திருக்கமாட்டோம்” என அமெரிக்கா மேலும் தெரிவித்துள்ளது.

துருக்கி ஜனாதிபதி தாக்குதலைப் பற்றி அறிவித்த அடுத்த நாளே அமெரிக்க அரசு இவ்வாறு கூறியுள்ளது.

இந்த தொலைப்பேசி உரையாடலின்போது துருக்கி ஜனாதிபதி, சிரியாவுடன் எல்லைப் பகுதியில் சேர்ந்து அமைக்கும் சிரிய அகதிகளுக்கான பாதுகாப்பு பகுதி மண்டலம் குறித்து தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இந்த பாதுகாப்பு மண்டலம் அமைப்பது நேட்டோ நாடுகளால் ஓகஸ்ட் மாதம் ஒப்புக்கொண்ட ஒன்று ஆகும்.

துருக்கி பயங்கரவாதிகள் என குறிப்பிடும் குர்திஷ் இன கிளர்ச்சியாளர்களின் அமைப்பான வை.பி.ஜி அமைப்பிடமிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்ட பகுதியாக இது இருக்க வேண்டும் என்று எண்ணியது.

பெரும்பாலும் சிரியாவின் ஜனநாயக படை மற்றும் அமெரிக்காவின் ஆதரவு படையைக் கொண்டதே இந்த வை.பி.ஜி படை ஆகும்.

இந்த பாதுகாப்பு பகுதிக்குள் இரண்டு மில்லியன் அகதிகளை அனுப்ப விரும்பியது துருக்கி. இப்போது துருக்கியில் 3.6 மில்லியன் மக்கள் அகதிகளாக உள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்கா தனது படைகளை வாபஸ் பெற ஆரம்பித்திருப்பதாக முன்னாள் ஐ.எஸ் நிலங்களை ஆக்கிரமித்திருக்கும் குர்திஷ் போராளிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்கா தனது வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சிரியாவில் தமது நிலைகளை எந்த வகையிலும் பாதுகாப்பதாக வை.பி.ஜி பேச்சாளர் ஒருவர் உறுதி அளித்துள்ளார். சிரியாவில் துருக்கியின் படை நடவடிக்கை மரணத்திற்கான வழி என்று ட்விட்டரில் எச்சரித்திருக்கும் குர்திஷ்கள் இது ஒரு நிரந்தர யுதத்திற்கு இட்டுச் செல்லும் என்று குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க துருப்புகள் தமது நிலைகளில் இருந்து வாபஸ் பெறுவதை மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகமும் உறுதி செய்துள்ளது.

எல்லையில் துருக்கி படைகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில் குர்திஷ் படைகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

துருக்கியில் சுயாட்சி கேட்டு பல தசாப்தங்களாக போராடி வரும் பீ.கே.கே குர்திஷ் அமைப்பின் ஒரு கிளையாகவே சிரிய குர்திஷ்களை துருக்கி கருகிறது.

எனினும் பீ.கே.கே உடன் நேரடி தொடர்பு இருப்பதை சிரிய குர்திஷ் போராளிகள் மறுக்கின்றனர். அவர்களுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பது குறித்து துருக்கி கடந்த காலங்களில் கண்டனங்களை வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Tue, 10/08/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக