உடல்செல் குறித்த ஆய்வுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு

மனித உடல் செல்கள் குறித்த ஆய்வு மேற்கொண்ட மூவருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனின் பீட்டர் ரெட்கிளிப் மற்றும் இரு அமெரிக்கர்களான வில்லியம் கெலின் மற்றும் கிரேக் செமென்சா ஆகியோர் 2019 ஆம் ஆண்டுக்கான நோபல் விருதை பகிர்ந்துகொள்கின்றனர். ஸ்வீடன் தலைநகர் ஸ்டொக்ஹோமில் நேற்று இந்த விருது அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இவர்கள் மூவரும், மனித உடலில் உள்ள செல்கள் எவ்வாறு ஒட்சிசனை உணர்ந்து, எடுத்துக்கொள்கின்றன என்பது குறித்து ஆய்வுகளைச் செய்துள்ளனர். இவர்களின் ஆய்வுகள் எதிர்காலத்தில் புற்றுநோய், பக்கவாதம், தீவிரமான நோய்வாய்ப்படுதல் ஆகிய பிரச்சினைகளுக்கு மிகப்பெரிய தீர்வாக அமையும். இந்த மூன்று ஆய்வாளர்களும் 9.18 இலட்சம் டொலர் பரிசுகளை சரிசமமாகப் பகிர்ந்துகொள்ளவுள்ளனர்.

நூற்றாண்டுகளாக ஒட்சிசனின் அடிப்படை முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டபோதும், மனித உடலில் உள்ள செல்கள் ஒட்சிசன் தன்மைக்கு ஏற்றவாறு மாற்றமடைகிறது என்பது நீண்டகாலமாக யாருக்கும் தெரியாத விடயமாக இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பெளதிகவியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்படவிருப்பதோடு, நாளை இரசாயனவியலுக்கான நோபல் பரிசும், வியாழக்கிழமை இலக்கியத்துக்கான நோபல் பரிசும், வெள்ளிக்கிழமை அமைதிக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்படும்.

Tue, 10/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை