கட்டுப்பணம் செலுத்துவது இன்று நண்பகலுடன் நிறைவு

எட்டாவது ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் இறுதி நாள் இன்றாகும்.

இன்று (06) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 8.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை அதற்கான கட்டுப் பணம் செலுத்துவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இதுவரை பதிவுசெய்யப்பட்ட 70 கட்சிகள் இருந்தபோதிலும், அவற்றில் அங்கீகாரம் பெற்ற 16 கட்சிகளும் 03 ஏனைய கட்சிகளும் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.

தேர்தலுக்கான கட்டுப்பணம் பெறுவது கடந்த செப்டெம்பர் 18 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, கடந்த வெள்ளிக்கிழமை (04) வரை ஜனாதிபதித் தேர்தலுக்காக 33 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதுடன் இதில் 14 பேர் சுயேச்சையாகக் களமிறங்குகின்றனர்.

இதேவேளை கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இன்றைய தினம் (06) ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மை சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தி அவர் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே முன்னாள் பிரதியமைச்சர் பஷீர் சேகுதாவூத், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஐ.எம். இல்யாஸ் ஆகியோர் கடந்த வியாழக்கிழமை (05) ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எட்டாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் நாளை திங்கட்கிழமை (07) நண்பகல் வரை ஏற்கப்படும் நிலையில், இதுவரை கட்டுப் பணம் செலுத்தியுள்ள சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளின் செயலாளர்களை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று (06) பிற்பகல் 2.30 மணிக்கு சந்தித்து, வேட்புமனு தாக்கல் செய்தல் செயன்முறை மற்றும் அடுத்து இடம்பெற வேண்டிய விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளார்.

நாளைய தினம் காலை 9.00 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரை வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய முடியும். இதற்கான எழுத்துமூல ஆட்சேபனைகளை 9.00 மணி முதல் முற்பகல் 11.30 க்குள் தெரிவிப்பதற்காக கால அவகாசம் வழங்கப்படும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்துள்ளார்.

வேட்பு மனுக்களைக் கையளிப்பதற்கு வேட்பாளருடன் சேர்த்து மூவர் அனுமதிக்கப்படுவார்கள். அதே நேரம், வெளியில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் தொலைக்காட்சித் திரையில் பார்வையிடுவதற்கு ஐவருக்குச் சந்தர்ப்பம் வழங்கப்படுமென அவர் கூறினார்.

இதேவேளை வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதன் காரணமாக நாளையதினம் (07) தேர்தல்கள் செயலக வளாகத்தை அண்டிய கல்வி வலயங்களிலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய கொழும்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட 03 பிரிவுகளிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும், ஶ்ரீ ஜயவர்த்தனபுர கல்வி வலயத்திற்கு உட்பட்ட 03 பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை (07) மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் அதிகூடிய வேட்பாளர்கள் களமிறங்கும் ஒரு தேர்தலாக இந்தத் தேர்தல் அமைந்துள்ளதாகக் கூறிய அவர், இதன் காரணமாகத் தேர்தல் செலவுகளும் அதிகரித்துள்ளதாக மஹிந்த தேசப்பிரிய கூறினார்.

தேர்தலுக்காக ஏற்கனவே ரூபா 450 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டிருந்தாலும், அது தற்போது ரூபா 500 கோடி வரை உயர்வடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இம்முறை நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் களமிறங்கவில்லை. குறிப்பாக ஐக்கிய ​தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய பெரிய கட்சிகளின் தலைவர்கள் போட்டியிடவில்லை. மேலும், சுதந்திரக் கட்சியின் சார்பில் எந்தவொரு வேட்பாளரும் களமிறங்கவில்லை. அதேநேரம், ஜனாதிபதி பதவியில் இருப்பவரோ, முன்னாள் ஜனாதிபதியோ, பிரதமரோ அல்லது எதிர்க்கட்சித் தலைவரோ களமிறங்காத ஒரு ஜனாதிபதி தேர்தலாகவும் இந்தத் தேர்தல் வரலாற்றில் இடம்பிடித்திருக்கின்றது.

அதேசமயம், ஒரு முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் புதல்வர் களமிறங்கும் முதல் ஜனாதிபதி தேர்தலாகவும் இந்தத் தேர்தல் விளங்குகிறது.

Sun, 10/06/2019 - 10:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை