தீர்வு வழங்குவதில் ஜனாதிபதியின் அரசியல் முடிவுகளே தடையாகின

இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பதற்கு எமது கட்சி மேற்கொண்ட முயற்சிகளுக்கு கடந்த வருடம் ஜனாதிபதி மேற்கொண்ட சில அரசியல் முடிவுகளே தடையாக அமைந்தன. அதனாலேயே அம் முயற்சி இடைநடுவில் கைவிடப்பட்டது என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.  

நேற்று முன்தினம் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.  

மேலும் உரையாற்றுகையில்,  

இன,மத பேதமின்றி நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டுமானால் இந்த ஜனாதிபதி தேர்தலில் எமது வேட்பாளரான சஜித் பிரேமதாஸ வெற்றி பெற்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி மீண்டும் உருவாகவேண்டும். அதற்கேற்ற வகையில் நாம் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.  

டி.எஸ். சேனநாயக்க, டட்லி சேனநாயக்க, சேர். ஜோன் கொத்தலாவெல, ஜே.ஆர். ஜயவர்த்தன, ரணசிங்க பிரேமதாஸ, டி .பி. விஜயதுங்க ஆகியோர் வரிசையில் தற்போது 7ஆவது தலைவராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் எமது கட்சி வீறுநடை போட்டு வருகின்றது.  

1994ஆம் ஆண்டு பெரும் வீழ்ச்சியடைந்திருந்த நிலையில் கட்சியின் தலைமைப்பொறுப்பை ஏற்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதனை மீண்டும் கட்டியெழுப்பி நாட்டை ஆளும் நிலைக்கு கொண்டுவந்துள்ளார். அவரது பணியை இந்தவேளையில் பாராட்டாமல் இருக்க முடியாது. கட்சிக்காக பெரும் துன்ப துயரங்களை சுமந்துவர்.

நாட்டில் நல்லிணக்கம், நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமானால் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரான சஜித் பிரேமதாஸ வெற்றிபெறுவதுடன் எமது ஆட்சி மீளவும் உருவாக்கப்படவேண்டும்.

நல்லாட்சி அரசாங்கமானது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுத்திருந்தது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டன. வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில் படையினர் வசமிருந்த பொதுமக்களின் காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டன.  

காணாமல் போனோர் விவகாரம் மற்றும் அரசியல் கைதிகள் விடயம் ஆகியவற்றுக்கும்  தீர்வு வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மீள்குடியேறிய மக்களுக்கும் உதவிகள் வழங்கப்பட்டன. பெண் தலைமைத்துவ  குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன. 

வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீளக் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும் வகையில் இந்த முயற்சிகள் இடம்பெறவில்லை என்ற அதிருப்தி எமது மக்கள் மத்தியில் உள்ளது.  

எம்.ஏ.எம்.நிலாம்  

Sat, 10/05/2019 - 10:38


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை