அனைத்து கட்சிகளும் ஒரே மேசையில் இருந்து பேசி முடிவெடுக்க வேண்டும்

வலியுறுத்துகிறது ஈ.பி.ஆர்.எல்.எவ்

ஜனாதிபதி தேர்தல் குறித்த தமிழ்த் தரப்புக்கள் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டுமென்ற அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் அது எவ்வளவு சாத்தியமென்பது தெரியவில்லை எனத் தெரிவித்திருக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் இத் தேர்தல் குறித்து தமிழர் தரப்பிலுள்ளஅனைத்துத் தமிழ்க் கட்சிகளும் ஒரே மேசையில் இருந்து பொதுவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

தமிழ் மக்கள் தரப்பில் பொதுவான ஒரு வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக சிவில் சமூக பிரதிநிதிகள், புத்திஜீவிகள் தமிழ் கட்சிகளை சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர். சுரேஸ் பிரேமச்சந்திரனை சந்தித்தும் இவர்கள் கலந்துரையாடினர். இக் கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இச் சந்திப்பு தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது,

பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான கால அவகாசம் முடிவடையும் நிலையில் இருக்கிறது.

அதுவும் எதிர்வரும் திங்கட்கிழமை முடிவடைகிறது.

ஆகையினால் பொது வேட்பாளரை நிறுத்துவது எவ்வளவு சாத்தியம் என்பது கேள்வியாகத் தான் இருக்கிறது. ஆகவே இருக்கின்ற கால அவகாசத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.

இன்றைக்கு தமிழ் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாக அரசியல் கைதிகளின் விடுதலை, காணிகள் விடுவிப்பு, காணி ஆக்கிரமிப்பு, சிங்கள பௌத்த மயமாக்கல் போன்ற பிரச்சினைகள் இருக்கின்றன.

இவற்றுக்குத் தீர்வு காணப்பட வேண்டியது மிக மிக அவசியமானது. ஆகையினால் இவ்வாறான கோரிக்கைகளை முன்வைத்து போட்டியிடும் வேட்பாளர்களுடன் பேசவேண்டும்.

அதற்கு சகல தமிழ்க் கட்சிகளும் ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்கவேண்டும். அவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பதற்கு அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒரே மேசையிலிருந்து கலந்துரையாடி முடிவை எடுக்க வேண்டும்.

அவ்வாறு எடுக்கின்ற பொதுவான நிலைப்பாட்டை முன்வைத்து வேட்பாளர்களுடன் பேசி அதன் பின்னர் ஆதரிக்கலாமா இல்லையா என்பது குறித்த முடிவை எடுக்கலாம் என்றார்.

பருத்தித்துறை விசேடநிருபர்

Sat, 10/05/2019 - 01:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை