தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வு

ஆட்சிக்கு வந்ததும் தோட்டத் தொழிலாளர்களை முழுமையாக பொறுப்பேற்கத் தயாரென ஜனநாயக தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ​தெரிவித்தார்.

இதுவரை காலமும் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டதிலும் பார்க்க அதிகூடிய சேவைகளையும் சலுகைகளையும் அவர்களுக்கு வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பசறையில் இடம்பெற்ற பொதுமக்களுடனான சந்திப்பில் உரையாற்றும்போதே ஐ.தே.மு ஜனாதிபதி வேட்பாளர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, -

பதுளை மாவட்டத்தில் 50 சதவீதத்திலும் அதிகமானோர் தோட்டத்தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இப்பிரதேசத்திலுள்ள மக்களுக்கு எனது தந்தை மிகப்பெரிய சேவையை பெற்றுக் கொடுத்தார். அவர் வழங்கியதிலும் பார்க்க அதிகூடிய சேவையை நான் தோட்டத் தொழிலாளர்களுக்காக பெற்றுத் தருவேன்.

பெருந்தோட்டத்துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் மிகவும் துன்பகரமான வாழ்க்கையை கொண்டுள்ளனர். பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ள இவர்களுடைய சம்பளத்தை நினைக்கும்போது எனக்கு வெட்கமாக உள்ளது.

நான்கு பேர் கொண்ட தோட்டத் தொழிலாளர் ஒருவருடைய குடும்பத்தை நடத்திச் செல்வதற்கு ரூபா 50 ஆயிரம் தொடக்கம் 55 ஆயிரம் வரை மாதாந்தச் செலவுக்குத் தேவையென புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.எனினும் தற்போது கிடைக்கும் குறைந்த சம்பளத்தைக் கொண்டு எவ்வாறு அவர்களால் குடும்பத்தை நடத்திச் செல்ல முடியும்?

நான் இந்நாட்டின் ஜனாதிபதியானால் தோட்டத் தொழிலாளிகளின் முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்வேன். அவர்களுக்குத் தேவையான அனைத்து விடயங்களையும் நிறைவேற்றித் தருவேன்.

ஜனாதிபதியாக இந்நாட்டைப் பொறுப்பேற்கவுள்ளோருக்கு இந்நாட்டு மக்கள் மீது அக்கறை இருக்க வேண்டும். சிலர் இனம், மதம் ,கட்சி பிரிவினையை காரணம் காட்டி அதிகாரத்தை பெற்றுக் கொள்ள பார்க்கின்றனர். மக்கள் மீது உண்மையான அன்பை இவர்களிடம் காணமுடியவில்லை. நாட்டை பாதுகாத்து மக்களுக்கு உண்மையான தலைமைத்துவத்தை வழங்க நான் தயாராகவுள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார்.

 

Tue, 10/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை