Header Ads

காணாமல் போனவர்களில் மூவர் திரும்பினர்; ஒருவர் மரணம்

காரைதீவு மீனவரின் சடலம் கடலுக்குள் வீசப்பட்டதாக தகவல் 

சாய்ந்தமருது - மாளிகைக்காடு பகுதியிலிருந்து கடலுக்குச் சென்று காணாமல் போன மூன்று மீனவர்களில் ஒருவர் கடலிலேயே உயிரிழந்துள்ளதுடன் கரை திரும்பிய மற்றைய இரண்டு மீனவர்களும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் (09) அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மீட்கப்பட்ட மீனவர்கள் சாய்ந்தமருது ஹிஜ்ரா வீதியை சேர்ந்த இஸ்மாலெப்பை முஹம்மட் ஹாரிஸ் (37வயது) மற்றும் சாய்ந்தமருது 13முந்திரியடி பகுதியைச் சேர்ந்த சீனி முஹம்மது ஜூனைதீன் (36வயதுடைய) ஆகியோராவர். இருவரும் நேற்றிரவு ஒன்பதாம் திகதி தெவுன்தர மீனவர்களால் மீட்கப்பட்டு திருகோணமலைக்கு கொண்டுவரப்பட்டனர். 

இவர்களுடன் சென்ற காரைதீவு-மங்கிளிப்பு சப்பு வீதியைச் சேர்ந்த சண்முகம் ஸ்ரீ கிருஷ்ணன் (47வயது) என்பவர் கடலிலே உயிரிழந்துள்ளதால் கரை திரும்பும் வரை சடலத்தை வைத்திருக்க முடியாததால் அவருடைய சடலத்தை கடலிலே போட்டதாகவும் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. 

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,  

கடந்த செப்டம்பர் மாதம் 18ஆம் திகதி பிற்பகல் இரண்டு முப்பது மணி அளவில் சாய்ந்தமருது- மாளிகைக்காடு பகுதியிலிருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிப்பதற்காக சென்ற படகில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது.

மீனவர்கள் மூவரும் கரை திரும்ப முடியாமல் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது 28ஆம் திகதி இவர்களுடன் சென்ற ஒருவர் உயிரிழந்துள்ளார். 

அவருடைய சடலத்தை படகுக்குள் வைத்திருந்த நிலையில் துர்நாற்றம் வீசிய காரணமாக கடந்த ஒக்டோபர் 07திகதி கடலில் வீசிய பின்னர், ஏனைய இருவரும் மயக்கமுற்ற நிலையில் படகுக்குள் இருந்துள்ளனர்.

இதன்போது தெவுந்தர - களப்பு ஹேன எனும் முகவரியைச் சேர்ந்த ஜீ. ஏ. ரத்ணசிறி என்பவருக்குச் சொந்தமான (0087 MTR சிதுகி) என்ற படகு சென்றுகொண்டிருந்தபோது மீனவர்கள் மயக்கமுற்ற நிலையில் இருந்ததை அவதானித்துள்ளனர். ஆழ்கடல் படகை அண்மித்து அவர்களது படகை இழுத்துக் கொண்டு திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு சேர்த்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.  

மயக்க நிலையில் கிடந்த நிலையில் காப்பாற்றப்பட்ட மீனவர்கள் இருவரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கடலில் மரணமான மீனவர் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.  

சர்வதேச கடற்பரப்பில் செயலிழந்து 0222என்ற இலக்கமுடைய இயந்திரப்படகு ஒன்று மீனவர்களுடன் தத்தளிப்பதாக தென்பகுதி மீனவர்கள் சிலர் மாத்தறை கடற்படை தலைமையகத்திற்கு தகவல் கொடுத்ததன் பேரில் கடற்படை முயற்சியில் இறங்கியது. 

அதேவேளை தென்பகுதி மீனவர்களின் படகு குறித்த நிர்க்கதியாகவிருந்த படகினை இழுத்துக் கொண்டு வந்து நேற்றுமுன்தினம் (9) புதன் மாலை திருமலைக் கடற்கரையில் சேர்த்தனர். 

இதனையடுத்து படகு உரிமையாளரிடம் காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கே.ஜெயசிறில் தொடர்புகொண்டு விசாரித்தார். 

காரைதீவு மீனவர் ஆழ்கடலில்வைத்து 10நாட்களில் மரணித்துள்ளதாகவும் அவரை இரு நாட்களில் கடலுக்குள் போட்டதாகவும் கூறப்பட்டது. அவருக்கு ஏலவே மூச்சுநோய் இருந்ததையும் குறிப்பிட்டுள்ளார். 

அங்கு படகில் கொண்டுவரப்பட்ட இரு மீனவர்களையும் திருமலை வைத்தியசாலைக்கு கொண்டுசென்று அனுமதித்துள்ளனர். ஒருவருக்கு சலக்கடுப்பு மற்றவருக்கு வயிற்றுவலியும் இருந்ததாக தெரிகிறது. 

அவர்களது செல்லிடத்தொலைபேசி உள்ளிட்ட பொருட்கள் பொலிசார் விசாரணையின் பொருட்டு தம்வசம் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. 

அநேகமாக குறித்த மீனவர்கள் இருவரையும் இன்று அவர்களது சொந்த ஊரான சாய்ந்தமருதுக்குக் கொண்டுவரப்படலாமெனக் கூறப்படுகிறது. 

குறித்த மீனவர் மரணமாகிய செய்தியை தவிசாளர் மீனவரின் வீட்டுக்குச்சென்று கூறியதும் வீடு ரணகளமாகியது. படகு கண்டுபிடிக்கப்பட்ட செய்தி கேள்விப்பட்டு மகிழ்ச்சியுடனிருந்து அப்பாவும் வருவார் என்று எதிர்பார்த்துகாத்துக்கொண்டிருந்த பிள்ளைகளுக்கு இச்செய்தி பேரிடியாக மாறியுள்ளதுடன் சோகத்தில் தேம்பிதேம்பி அழுகின்றனர். 

(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல் சலாம், காரைதீவு குறூப் நிருபர் சகா)

Fri, 10/11/2019 - 10:12


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.