கிளிநொச்சியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்

போதை கடத்தல்காரர்களை கைது  செய்ய சென்ற போது சம்பவம்

கிளிநொச்சியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இச் சம்பவம் நேற்றைய தினம் காலை கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் இடம்பெற்றதுடன் இதில் மதுவரி திணைக்களத்தின் வாடகை வாகனம் சேதமடைந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சியில் பாரிய போதைப்பொருள் கடத்தல் இடம்பெறவுள்ளதாக மதுவரித் திணைக்களத்திற்கு கிடைத்த தகவலையடுத்து மதுவரித் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி ஒருவரும் உத்தியோகத்தர் ஒருவரும் வாடகைக்கு வாகனம் ஒன்றில் தேடுதலை மேற்கொள்ள தகவல் வழங்கிய மன்னாரைச் சேர்ந்த நபருடன் அறிவியல்நகர் காட்டுப் பகுதிக்குள் சென்றுள்ளனர்.

இதேவேளை பொலிஸாருக்கும் போதைப்பொருள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே பொலிஸ் அணியொன்றும் குறித்த பகுதிக்குள் தேடுதல் மேற்கொள்ள சென்றுள்ளது.

மதுவரித் திணைக்களம் மற்றும் பொலிஸார் ஆகிய இரண்டு தரப்பினர்களுக்கும் இடையே தொடர்பாடலற்ற நிலையில் சிவில் உடையில் சென்ற பொலிஸார் மதுவரித் திணைக்களத்தின் வாகனத்தை நிறுத்துமாறு கூறிய போது அவர்கள் வாகனத்தை நிறுத்தாது சென்றுள்ளனர்.

இந் நிலையிலேயே வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளனர். இதில் தகவல் வழங்கிய மன்னாரைச் சேர்ந்த நபரே காயமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

(கிளிநொச்சி குறூப் நிருபர்)

Tue, 10/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை