அரசியல்வாதிகளை மலையக மக்களின் காலடிக்கு வரச் செய்தவர் பிரேமதாச

பெருந்தோட்ட மக்களை நாடற்றவர்கள், கள்ளத்தோணி என்றும் அழைத்த போது அவர்களும் இந் நாட்டு மக்களென அவர்களுக்கும் பிரஜாவுரிமை வழங்கியவர் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவே என அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.எங்களுக்கு ஒரு பொறுப்பும் கடமையும் இருக்கின்றது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக எமது வாக்குகளை வழங்கி அவரை அடுத்த ஜனாதிபதியாக கொண்டுவர வேண்டும். அன்று அவர் பிரஜாவுரிமையை வழங்காவிட்டால் இன்று இந்த நாட்டில் நாங்கள் தலை நிமிர்ந்து வாழ முடியாது.

எங்களுடைய உரிமைகளையும் பெற்றுக் கொண்டிருக்கமுடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

சஜித் பிரேமதாசவின் ஒன்றாய் முன்னோக்கிச் செல்வோம் என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் உரையாற்றுகையில்,

எந்தவொரு பிரஜையும் அந் நாட்டில் பிரஜையாக இல்லாதபட்சத்தில் அந்த நாட்டில் இருக்கின்ற எந்த ஒரு சட்டத்தையும் அல்லது சலுகைகளையும் அனுபவிக்க முடியாது. இன்று மலையக மக்கள் ஏனைய சமூகங்களை போல தலை நிமிர்ந்து நிற்கின்றார்கள் என்றால் அதற்கு காரணம் மறைந்த ரணசிங்க பிரேமதாசவே.

அவர் எமக்கு வழங்கிய வாக்குரிமை எங்களிடம் இருப்பதன் காரணமாகவே எந்தத் தேர்தல் வந்தாலும் எங்களுக்கு ஒரு மதிப்பும் மரியாதையும் வந்துவிடுகின்றது. எங்களுடைய வாக்குகள் எல்லோருக்கும் தேவைப்படுகின்றது.

எல்லா தேர்தல் காலங்களிலும் எங்களுக்கு மதிப்பும் மரியாதையும் இருந்தாலும் கூட தேர்தலின் பின்பு நாங்கள் கவனிக்கப்படுவது மிகவும் குறைவாகவே இருக்கின்றது.

வாக்குரிமை கிடைத்ததன் காரணமாக இன்று நாங்கள் பல்வேறு சாதனைகளை செய்து கொண்டிருக்கின்றோம்.

அதற்காக முழுமையாக செயற்பட்ட அமரர் தொண்டமான் உட்பட அனைத்து தலைவர்களையும் நாம் இச் சந்தர்ப்பத்தில் நன்றியுடன் நினைவு கூறுகின்றோம்.

அதற்கு வித்திட்டவர் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா. எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவரது மகன் சஜித் பிரேமதாசவை அடுத்த ஜனாதிபதியாக கொண்டு வர வேண்டும் என்றார்.

நுவரெலியா தினகரன் நிருபர்

 

Fri, 10/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை