சவூதி பஸ் விபத்தில் 35 யாத்திரிகர்கள் பலி

சவூதி அரேபியாவின் மதீனா மாகாணத்தில் பயணிகள் பஸ் வண்டி ஒன்று டிரக் வண்டியில் மோதிய விபத்தில் 35 பேர் உயிரிழந்திருப்பதோடு மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.

அரபு மற்றும் ஆசிய யாத்திரிகர்களை ஏற்றிச்சென்ற தனியார் பஸ் வண்டி ஒன்றே கடந்த புதன்கிழமை இரவு அல் அகால் சிறு நகரில் கனரக வாகனத்தில் மோதி இருப்பதாக சவூதி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மக்காவில் இருந்து மதீனாவை இணைக்கும் வீதியிலேயே இந்த பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் அல் ஹம்னா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதோடு விபத்துக் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த கோர விபத்தில் பஸ் வண்டி உருக்குலைந்ததுடன், தீப்பிடித்தும் எரிந்ததாக சவூதி அரேபிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விபத்து ஏற்பட்டவுடன் பஸ் முழுவதும் தீப்பிடித்து எரிந்ததால், அதில் இருந்த பயணிகளால் வெளியேற முடியவில்லை. சிலர் மட்டுமே காயத்துடன் தப்பியதால் இந்த மிகப்பெரிய உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் சவூதியில் வாழும் வெளிநாட்டு தொழிலாளர்களும் இருப்பதோடு இவர்கள் உம்ராஹ் கடமைக்காக சென்றவர்கள் என்று சவூதியின் ஓகாஸ் செய்திப்பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரலில் எண்ணெய் லொரி ஒன்றுடன் பஸ் வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பிரிட்டன் யாத்திரிகர்கள் கொல்லப்பட்டதோடு மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

2017 ஜனவரியில் மக்கா யாத்திரைக்குப் பின் மதீனாவுக்கு திரும்பும் வழியில் சிறு பஸ் வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் இரு மாதக் குழந்தை உட்பட ஆறு பிரிட்டன் நாட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

Fri, 10/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை