சு. கவின் கௌரவத்தை பாதுகாக்கவே பொதுஜன பெரமுனவுடன் இணைந்தோம்

சந்திரிகா குமாரதுங்கவிற்கு சு.க செயலாளர் பதில்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெறுமதி மற்றும் கௌரவத்தை பாதுகாக்கும் நோக்குடனே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஒன்றிணைந்ததாக தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் கூட்டணி சேர்ந்தது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அனுப்பிய கடிதத்திற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர பதிலளித்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் அவர் தனது பதிலை பதிவேற்றியுள்ளார்.

எஸ்.டபிள்யு. ஆர்.டி பண்டாரநாயக்க உருவாக்கிய சுதந்திரக் கட்சியை

பாதிப்பிற்குள்ளாக்கும் எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள அவர்,

ஐக்கிய தேசியக் கட்சி தமது கட்சியின் கொள்கைகளுடன் முரண்படுவதால், கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்குவதற்கு தீர்மானித்ததாக கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டு அரசாங்கமொன்றை அமைக்க எடுத்த தீர்மானமே, கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பின்னடைவை சந்தித்தமைக்கு பிரதான காரணமாக அமைந்து எனவும் தயாசிறி ஜயசேகர தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.தே.கவுடனான இணக்கப்பாடு காரணமாக நாட்டில் முன்னிலையில் இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கடந்த 5 வருடங்களில் மூன்றாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளதாக தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.

மத்திய செயற்குழு எடுத்த தீர்மானத்திற்கு அமைய பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்யப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

வளமான நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு கட்சி மற்றும் தனிப்பட்ட அரசியல் கொள்கைகளுக்கு அப்பால் செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சந்திரிகா கடிதம்

இதேவேளை, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கி பெறுமதியான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை அழிக்க இடமளிக்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அந்த கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு அண்மையில் அனுப்பிய கடிதம் அனுப்பி வைத்திருந்தார்.

சுதந்திர கட்சி கோட்டாபயவுக்கு ஆதரவு வழங்குவது ஏற்புடையதல்ல. இந்த செயற்பாடு சுதந்திர கட்சியை முழுமையாக காட்டி கொடுப்பதாகும். கட்சியின் தலைமைத்துவத்தை கைவிட தயாரென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தால், தலைமைத்துவத்தை ஏற்று கட்சியை சிறந்த முறையில் கட்டியெழுப்பி இருப்போம் என்று அவர் கூறியிருந்தார்.(பா)

Mon, 10/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை