தனது பயிற்றுவிப்பில் பிரச்சினைகள் இல்லை

மிஸ்பா உல் ஹக்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, அனுபவம் குறைந்த இளம் வீரர்கள் கொண்ட இலங்கை அணியிடம் 20க்கு20 தொடரை 3--0 என இழந்த நிலையில், அவ்வணியின் புதிய தலைமை பயிற்சியாளரான மிஸ்பா உல் ஹக் மீது விமர்சனங்கள் எழுந்திருக்கின்றது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராகவும், அதன் தேர்வாளர்களில் ஒருவராகவும் மிஸ்பா உல் ஹக் அண்மையில் நியமனம் செய்யப்பட்டிருந்தார். அவரின் ஆளுகையில் பாகிஸ்தான் அணி விளையாடும் முதல் 20க்கு20 தொடராக இலங்கை அணியுடனான 20க்கு20 போட்டிகள் அமைந்திருந்தன.

மிஸ்பா உல் ஹக்கிற்கு முன்னர் மிக்கி ஆத்தரின் ஆளுகையில் இருந்த பாகிஸ்தான் அணி, தொடர் வெற்றிகளை பெற்று 20க்கு20 போட்டிகளில் உலகில் முதல்நிலை அணியாக மாறியிருந்தது. இவ்வாறாக கடந்த காலங்களில் சிறப்பான பதிவுகளை காட்டிய பாகிஸ்தான் அணி இலங்கை அணியுடன் வைட்வொஷ் தொடர் தோல்வியினை தழுவிய காரணத்தினாலேயே புதிய பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் மீது விமர்சனங்கள் எழுந்திருக்கின்றது.

தோல்விக்கு காரணம் தனது பயிற்றுவிப்பு இல்லை என்னும் விதத்தில் மிஸ்பா உல் ஹக் கிண்டலான முறையில் கருத்து வெளியிட்டிருக்கின்றார்.

“நான் ஏதாவது செய்துவிட்டேனா? நான் எமது அணியில் வலதுகை துடுப்பாட்ட வீரர் ஒருவரினை இடதுகைக்கு மாற்றியிருக்க வேண்டும்? அல்லது வலது கையினால் பந்துவீசுபவரை இடதுகைக்கு மாற்றியிருக்க வேண்டும்? இது மாதிரி நான் ஏதாவது செய்துவிட்டேனா?” என மிஸ்பா உல் ஹக் கேள்வி எழுப்பியிருந்தார்.

மிஸ்பா உல் ஹக் இலங்கை அணியுடனான ரி20 தொடர் மூலம் தமது அணி பாடம் ஒன்றை கற்றுக் கொண்டுள்ளது என குறிப்பிட்டிருந்தார்.

அவர்கள் (இலங்கை அணியினர்) ஒவ்வொரு துறைகளிலும் எம்மை தோற்கடித்து எமக்கு பாடம் ஒன்றை கற்பித்து இருக்கின்றனர்.”

அவர்கள் (20க்கு20 தொடரின்) ஒவ்வொரு போட்டியினையும் அவர்களின் முழு ஆதிக்கத்துடனேயே வெற்றி பெற்றிருந்தனர். இது நாம் விடையளிக்க வேண்டிய பல கேள்விகளை எழுப்பிவிட்டிருக்கின்றது. நாம் மோசமான கிரிக்கெட்டினை விளையாடியது உண்மை. இதற்கு பொறுப்பு நானே, ஆனால் நான் இதற்கு காரணம் என்னவென்று தற்போது யோசனை செய்து கொண்டிருக்கின்றேன். ஏனெனில், இந்த வீரர்கள் கொண்ட தொகுதியே பாகிஸ்தானை உலகின் முதல்நிலை 20க்கு20 அணியாக மாற்றியிருந்தது.”

இன்னும் மிஸ்பா உல் ஹக்கிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தோல்விக்கு 20க்கு20 தொடரின் போட்டிகள் இடம்பெற்ற லாஹூர் ஆடுகளமும் காரணமா? எனக் கேட்கப்பட்டது.

அதற்கு மிஸ்பா உல் ஹக் இவ்வாறு பதிலளித்திருந்தார்.

”தோல்விக்கு இது காரணம் இல்லை. அவர்கள் (பாகிஸ்தான் அணியின் முன்வரிசை துடுப்பாட்டவீரர்கள்) சுயநலத்துடன் செயற்பட்டிருக்கின்றனர். அவர்கள் மைதானத்தின் மெதுவான தன்மையினை இசைந்து கொள்வதில் தோல்வியடைந்திருக்கின்றனர். அவர்கள் சிறந்த துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்த முயன்ற போதிலும் மறுமுனையில் ஓட்டமற்ற பந்துகள் அதிகமாக மாறுவதனையும், பதற்றத்தினையும் தடுக்க முடியவில்லை. இன்னும் (எமது சிறந்த துடுப்பாட்டவீரரான) பாபர் அசாமிற்கு (இந்த 20க்கு20 தொடரின்) மூன்று இன்னிங்ஸ்களிலும் பந்தினை நேரத்திற்கு அடிக்க முடியாமல் போயிருந்தது.”

20க்கு20 சர்வதேச போட்டிகளில் 50 இற்கு கிட்டவான துடுப்பாட்ட சராசரியினை கொண்டிருக்கும் பாபர் அசாம் இலங்கை அணியுடனான 20க்கு20 தொடரில் மூன்று இன்னிங்ஸ்களில் ஒன்றில் கூட 30 ஓட்டங்களை தாண்டியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு மிஸ்பா உல் ஹக், இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர்களும் பிரதான காரணமாக இருந்தனர் எனத் தெரிவித்திருந்தார்.

”எமது துடுப்பாட்ட வீரர்கள் இசைவாகிக் கொள்வதற்கு இலங்கை அணியின் பந்துவீச்சு ஒருபோது இடம் தந்திருக்கவில்லை. இன்னுமொரு பெரிய காரணம் அவர்களின் மணிக்கட்டு சுழல்பந்துவீச்சாளர் (வனிந்து ஹஸரங்க). அவரின் கூக்ளி பந்துகளை நாம் எதிர்கொள்ள தவறியதோடு, எங்களது சுழல்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அவர்கள் (இலங்கையின் வீரர்கள்) சிறப்பாக துடுப்பாடியிருந்தனர்.”

Sat, 10/12/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக