தேர்தல் ஆணைக்குழுவுக்கு இராணுவ தளபதி விளக்கம்

ஜனாதிபதி வேட்பாளரின் விளம்பர விவகாரம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரசார விளம்பரத்தில் தனக்குத் தெரியாமல் தனது பழைய படத்தையும் வாசகத்தையும் பிரசுரித்திருப்பதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு விளக்கமளித்துள்ளார்.

பத்திரிகையொன்றில் பிரசுரிக்கப்பட்ட விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் தனது படமும் வாசகமும் 2009 ஆம் ஆண்டு களுத்துறையில் நடந்த கூட்டமொன்றிற்கானதென்றும் அவர் கூறியுள்ளார். அந்த விளம்பரத்துக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்றும் அவர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும் களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய சந்தர்ப்பத்தில் தான் இராணுவத் தளபதியாக இருக்கவில்லையென்றும் அப்போது 58 ஆம் படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரியாகவே செயற்பட்டிருந்தேன். அந்த படத்தையும் அப்போது நான் கூறிய கருத்தையுமே எனக்குத் தெரியாமல் விளம்பரத்தில் பயன்படுத்தியுள்ளார்கள் என்று எழுத்து மூலம் விளக்கமளித்துள்ளார்.

அத்துடன் இவ்விளக்கத்தின் பிரதியை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அனுப்பி வைத்துள்ளார். குறிப்பிட்ட பத்திரிகையொன்றில் அண்மையில் வெளியான முழு பக்க விளம்பரத்தில் இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவின் படமும் அவரது கருத்தும் வெளியிடப்பட்டிருந்தது. இது தேர்தல்கள் சட்டவிதிகளுக்கு முரணானது எனக்கூறி ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் அவ்விளம்பரம் தொடர்பில் ஜனாதிபதியிடமும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடமும் முறைப்பாடு செய்தனர். இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இராணுவத் தளபதி அதற்கான விளக்கத்தை நேற்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

லக்ஷ்மி பரசுராமன்

 

 

Sat, 10/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை