சிறுபான்மை மக்கள் பேரம் பேசும் சக்தியை இழந்துவிடக்கூடாது

இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு காலகட்டத்தில் தீர்மானிக்கும் சக்தியாக அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமானும், அமரர் அஷ்ரப்பும் திகழ்ந்தார்கள். ஆனால் இன்று நாம் படிப்படியாக அந்த நிலையை இழந்து வருகின்றோம். எனவே எமக்கு பல்வேறு அரசியல் கட்சி இருந்தாலும், கொள்கை ரீதியாக நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டிய காலம் இதுவாகும் என விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதி செய்யும் முகமாக மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணி ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த தேர்தல் பிரசார கூட்டம் மஸ்கெலியா அக்சயா மண்டபத்தில் நேற்று (18) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை அரசியலில் சிறுபான்மை மக்கள் பேரம் பேசும் சக்தியை படிப்படியாக இழந்து வருகின்றார்கள். இன்று பெரும்பான்மை கட்சிகளின் எண்ணமெல்லாம் அதிகமான பெரும்பான்மை மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக இனவாதத்தை கட்டவிழ்த்து விடுகிறார்கள். இதனை தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்கள் புரிந்த கொள்ள வேண்டும். இன்று முஸ்லிம்களும் தமிழர்களும் கட்சி ரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் பிரிந்து நின்று செயல்படுவதை காண முடிகின்றது.

இது எமக்கு ஆரோக்கியமான செயல்பாடு அல்ல. இந்த நாட்டில் நாங்களும் ஏனைய சமூகங்களை போல தலை நிமிர்ந்து வாழ வேண்டுமாக இருந்தால் சிறுபான்மை சமூகம் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

ஹற்றன் சுழற்சி நிருபர்

 

 

 

Sat, 10/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை