புதிய அத்தியாயம் ஆரம்பம்; வடக்கில் பொருளாதார புரட்சி

இன நல்லிணக்கத்தின் சின்னம்
சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா, மத்திய கிழக்கு
நாடுகளுக்கும் பலாலியிலிருந்து சேவை -  பிரதமர் பெருமிதம்

இலங்கை சிவில் விமான சேவையில் புதியதோர் அத்தியாயமாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்றுக் காலை (17) திறந்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையில் விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், முதலாவது விமானப் பயணத்தை ஆரம்பித்து எயார் இந்தியா எலைன்ஸ் (Air India Alliance) நிறுவனத்திற்குச் சொந்தமான விமானமொன்று சென்னையிலிருந்து அந்நாட்டின் விமான சேவை அதிகாரிகளுடன் நேற்று யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

எனினும் நாளாந்த விமான சேவைகள் நவம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான அர்ஜுன ரணதுங்க, ஜோன் அமரதுங்க, ரவி கருணாநாயக்க, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் ராமநாதன், மாவை சேனாதிராஜா, வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் உள்ளிட்ட மாகாண மக்கள் பிரதிநிதிகளும் இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங் சந்து, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட, முப்படைத் தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு துறை முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

விமான நிலைய அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,

இன நல்லிணக்கத்தின் சின்னமான யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் முழுமையான பலன்களை வடக்கு மக்கள் இன்னும் 3 வருடங்களில் அனுபவிக்க முடியும்.

"இன்று யாழ்ப்பாணத்திற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க தினமாகும். கடந்த வருடம் ஏப்ரல் மாதத்திலேயே பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்து சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்த தீர்மானித்தோம். அதற்கான பணிகள் இந்த வருடத்தின் ஜனவரி மாதத்திலேயே ஆரம்பிக்கப்பட்டு இடையில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற போதும் நாம் அதனைக் கைவிடவில்லை.

இத்தகைய சூழ்நிலையிலும், விமான நிலைய பணிகள் இடம்பெறுமா? எனச் சிலர் பிரசாரம் செய்தனர். எனினும், 6 மாத காலத்திற்குள் வெற்றிகரமாக இச் செயற்திட்டத்தை நிறைவு செய்துள்ளோம். இது முதற்கட்டமே. இதனூடாக இந்தியாவின் பல மாநிலங்களுக்கும், விமான சேவையை மேற்கொள்வதே எமது நோக்கம். இரண்டாம் கட்டமாக சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் விமான சேவையை முன்னெடுக்க வாய்ப்பு ஏற்படும்.

இது வடக்கு மக்களின் பொருளாதாரப் புரட்சியாக கருதமுடியும். அத்துடன், வடக்கில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு இது வாய்ப்பாக அமைவதுடன், அதனூடான பொருளாதாரமும், மேம்படுத்தப்படும். அடுத்து மட்டக்களப்பிலும் சர்வதேச விமான நிலையங்களை நிறுவுவதே எமது எதிர்பார்ப்பு. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த இதன் மூலம் வழிவகுக்கப்படும்.

யாழில் ஹோட்டல் பாடசாலை ஒன்றை நிறுவுவதற்கும், சுற்றுலாத்துறை தொடர்பான பயிற்சி நிலையம் நிறுவுவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அமைச்சர் துறைசார்ந்தவர்களுடன் யாழ்.மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன், சிறந்த திட்டமொன்று தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

காங்கேசன்துறை துறைமுகமும் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. 2015 ஆம் ஆண்டில் நாம் யாழ்ப்பாணத்தில் அபிவிருத்தி செயற்திட்டங்களை ஆரம்பித்தோம். முதற்கட்டமாக படையினர் வசமிருந்த காணிகளை மக்களுக்கு மீளப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தோம். அதிலிருந்து தொடர்ச்சியாக பல்வேறு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

இன்னும் 5 வருடங்களில் பாரிய முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம் என்பது உறுதி. அரசாங்கத்தின் கடந்த 5 வருட காலமே, மிக கஸ்டமான காலமாக இருந்தது. எனினும், நாம் இது போன்ற செயற்திட்டங்களை ஆரம்பித்து வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளோம்.

இந்திய அரசாங்கம், எமக்குத் தொடர்ச்சியான உதவிகளைச் செய்து வருகின்றது. நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலத்திலும், அதன் பின்னரும், இந்தியா தொடர்ச்சியான உதவிகளை எமக்கு வழங்கி வருகின்றது. இரு நாட்டினரும் பொருளாதார மேம்பாட்டிற்காக இணைந்து செயற்படுவோம்" என்றார்.

இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக யாழ்ப்பாணம், பலாலியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த சர்வதேச விமான நிலையத்திற்கு 2,250 மில்லியன் ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விமான நிலையத்தின் நிர்மாணப் பணிகளுக்காக இலங்கை அரசாங்கம் 1,950 மில்லியன் ரூபாய் நிதியும் இந்திய அரசாங்கத்தின் 300 மில்லியன் ரூபாய் நிதியும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மூன்று கட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தின் முதலாவது கட்டத்தின் கீழ் தற்போது விமான நெறிப்படுத்தல் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் பிரதான ஓடு பாதை 950 மீற்றர் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இங்கு 72 ஆசனங்களுக்குக் குறைந்த பொம்பார்டியர் - 100 (Bombardier - 100) வகை விமானங்களை ஏற்றி இறக்கக்கூடிய வசதிகள் உள்ளன.

1940 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பிரிட்டிஸ் ஆட்சியில் உலக யுத்தத்தின் போது, பலாலி விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, எயார் சிலோன் என்ற பெயரில் விமான சேவைகள் நடைபெற்றுள்ளன. அதன்பின்னர் 1980 ஆம் ஆண்டின் பின்பு முற்றாக நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் 2002 ஆம் ஆண்டு விமானப் படை அதனைப் பொறுப்பேற்று சிவில் விமான சேவைகள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

யாழிலிருந்து லோரன்ஸ் செல்வநாயகம், சுமித்தி தங்கராசா

Fri, 10/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை