பேரிடி ஓசை..! கணப்பொழுதில் பஸ் தூள் தூளாகியது

விபத்தில் தப்பியவரின் திகில் அனுபவம்

பேருந்தில் அனைவரும் நித்திரையில் இருந்த வேளை, பேரிடியோசைபோல் சத்தமொன்று கேட்ட மறு கணத்தில் பஸ்ஸினுள் ஓவென்று அலறல்... கணப்பொழுதில் அனைத்துமே தூள் தூளாகின என மின்னேரிய கோர விபத்தில் சிக்கி உயிர் தப்பிய காரைதீவு பிரதேச சபை செயலாளர் அருணாசலம் சுந்தரகுமார் கூறினார். இந்த விபத்து சம்பவம் தொடர்பான தனது திகில் அனுபவங்களைத் தினகரனுடன் பகிர்ந்துகொண்ட அவர் கூறியதாவது,

நானும் எனது மனைவியும் கொழும்பு மட்டு. ரயில் இல்லாத காரணத்தினால் கொழும்பிலிருந்து கல்முனை பஸ்ஸில் பயணித்தோம். மாலை 4.30மணிக்குச் செல்லும் அக்கரைப்பற்று பேருந்தில் சீற் இல்லாத காரணத்தினால், 6 மணிக்குப் புறப்பட்ட கல்முனை பஸ்ஸில் பயணித்தோம். நாங்கள் நேரத்தோடு இருக்கையை ஒதுக்கிக்கொள்ளாத காரணத்தினால் பின்னாலிருக்க நேரிட்டது.

சாரதிக்குப் பின்னாலிருக்கும் முன் இருக்கையில் எமது ஊரைச் சேர்ந்த மருத்துவ மாதுக்கள் பயணித்ததைக் கண்டேன். பேருந்து நிறைய பயணிகள். இடையிடையே சிறுமழை. பேருந்து வந்துகொண்டிருந்தது. நேரம் ஆக ஆக நித்திரை வந்தது. பலரும் தூக்கத்திலிருந்தோம். திடீரெனப் 'படார்' என்ற பாரிய சத்தம்கேட்டது. அதேகணம் கண்ணாடிகள் மளமளவென நொருங்கின. கம்பிகள், தகரங்கள் உடையும் சத்தம் கேட்டன. எம்மைநோக்கி ஏதோ வருவதுபோன்று தெரிந்தது.

மறுகணம் எனது மூக்கினால் இரத்தம் வழிந்துகொண்டிருந்தது. பஸ் மோதியதில் அனைத்து பயணிகளும் அவர்களுக்கு முன்னாலுள்ள சீற்றுகளில் முட்டி காயங்கள் ஏற்பட்டன. முன்னாலிருந்தவர்களுக்குப் படுகாயங்கள் ஏற்பட்டிருந்தன. எங்கும் இரத்தமயம்.

சாரதி அந்த இடத்திலே மரணித்திருந்தார். பாரிய விபத்து அது. இலேசாக மழை துமித்துக்கொண்டிருந்தது. நாம் இறங்கக்கூடியவர்கள் படபடவென இறங்கினோம். சற்றுநேரத்தில் அம்புலன்ஸ் வந்தது. பலத்தகாயங்களுக்குள்ளானவர்களை ஏற்றிக்கொண்டு போனார்கள். நான் ஊருக்குப் போன்பண்ணி முன்னாலிருந்தவர்களின் உறவினர்களுக்குத் தகவல் கொடுத்தேன்.

எனது வாழ்க்கையில் இவ்வாறானதொரு விபத்தைச் சந்தித்தது இதுவே முதற் தடவை. இன்னமும் அந்தப் பிரமை நீங்கவில்லை என்றார்.

காரைதீவு குறூப் நிருபர்

Fri, 10/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை