ஐ.எஸ் தலைவர் பக்தாதி கொல்லப்பட்டார்?

சிரியாவில் அமெரிக்கா மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை ஒன்றில் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி கொல்லப்பட்டதாக சிரியா, ஈராக் மற்றும் ஈரான் வட்டாரங்கள் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி வெள்ளை மாளிகையில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முக்கிய அறிவித்தல் ஒன்றை நேற்று வெளியிட தயாராக இருந்தார்.

நேற்று ஞாயிறு அதிகாலை மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை ஒன்றில் பக்தாதி இலக்கு வைக்கப்பட்டதாக பெயரை வெளியிடக் கூடாது என்ற நிபந்தனையில் அமெரிக்க அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு தகவல் அளித்துள்ளார். எனினும் அந்த தாக்குதல் வெற்றி அளித்ததா என்பது பற்றி உறுதி செய்யப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

துருக்கி எல்லையை ஒட்டிய ப்ரிஷா கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஹெலிகொப்டர்கள், விமானங்கள் மற்றும் தரைப் படையினரை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பக்தாதி கொல்லப்பட்டிருப்பதாக நம்பப்படுவதாக வட மேற்கு சிரிய மாகாணமாக இத்லிப்பின் போராட்டக் குழு ஒன்றின் தளபதி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

பக்தாதி கொல்லப்பட்டதாக சிரியாவில் இருந்து தமக்கு செய்தி கிடைத்திருப்பதாக இரு ஈரானிய அதிகாரிகள் மற்றும் இரு ஈராக் பாதுகாப்பு தரப்புகள் குறிப்பிட்டுள்ளன.

“இத்லிப்பில் இருந்து தமது குடும்பத்தினரை துருக்கி எல்லையை நோக்கி வெளியேற்ற முயன்ற நிலையில் பக்தாதியின் மறைவிடம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இத்்லிப்பில் பக்தாதி மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் கொல்லப்பட்டிருப்பதை ஈராக்கிய உளவு குழுவினருக்கு சிரியாவில் உள்ள வட்டாரங்கள் மூலம் உறுதி செய்ய முடிந்தது” என்று ஈராக் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

பக்தாதியின் இருப்பிடத்தை கண்டுபிடிப்பதில் ஈராக்கிய உளவுப் பிரிவினர் முக்கிய பங்காற்றியதாகவும் இந்த படை நடவடிக்கை குறித்த காட்சிகள் வெளியிடப்படும் என்றும் ஈராக் அரச தொலைக்காட்சி குறிப்பிட்டுள்ளது.

இது பற்றி முதல் செய்தியை வெளியிட்ட அமெரிக்காவின் நியூஸ்வீக் பத்திரிகை, இந்த படை நடவடிக்கையில் பக்தாதி கொல்லப்பட்டதாக அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி தெரிவித்தது.

சாத்தியமான உளவுத் தகவல் கிடைத்ததை அடுத்து சிறப்பு அதிரடிப் படை இந்த தாக்குதலை நடத்தியதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதுபற்றி அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பெண்டன் உடன் எந்த கருத்தும் வெளியிடவில்லை.

இரண்டு மணி நேரம் நீடித்த படை நடவடிக்கையில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதாக சிரிய உள்நாட்டு யுத்தத்தை கண்காணிக்கும் பிரிட்டனை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. இதில் குறைந்தது ஒரு குழந்தையும் இரு பெண்களும் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் பக்தாதி இருக்கிறாரா என்பது தமக்கு தெரிவில்லை என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

பிரதான இலக்கு மீது ஒரு மணி நேரம் கடும் வான் தாக்குதல் நடத்தப்பட்ட பின், ஹெலிகொப்டரில் இருந்து தரையிறங்கிய படையினர் தரைவழியாக தாக்குதல்களை நடத்தியுள்ளனர் என்று கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இது பற்றி டிரம்ப் கடந்த சனிக்கிழமை இரவு சுசகமான ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டிருந்தார். “மிகப் பெரிய நிகழ்வொன்று தற்போது இடம்பெற்று வருகிறது” என்று அதில் கூறப்பட்டிருந்தது.

டிரம்ப் முக்கிய அறிவிப்பொன்றை அமெரிக்க நேரப்படி ஞாயிறு காலை வெளியிடுவார் என்று வெள்ளை மாளிகை பேச்சாளர் ஹோகன் கிட்லி குறிப்பிட்டார். எனினும் அது பற்றி மேலதிக எந்த தகவலையும் அவர் குறிப்பிடவில்லை.

பக்தாதி ஈராக் மற்றும் சிரிய எல்லை பகுதியில் தலைமறைவாக இருப்பதாக நீண்டகாலமாக நம்பப்பட்டு வந்தது. ஈராக்கில் அல் கொய்தாவின் கிளையாக மறைமுகமாக இயங்கிய 2010 ஆம் ஆண்டு தொடக்கம் பக்தாதி அந்தக் குழுவை வழி நடத்தி வந்தார்.

கடந்த செப்டெம்பர் 16 ஆம் தகிதி இஸ்லாமிய அரசின் ஊடக வலையமைப்பு பக்தாதியின் 30 நிமிட உறை ஒன்றை வெளியிட்டிருந்தது. நாளாந்தம் தாக்குதல்கள் இடம்பெறுவதாகவும் ஈராக், சிரியாவில் ஐ.எஸ் உடன் தொடர்புபட்டு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பெண் களை விடுவிக்கும்படியும் தமது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் தோற்கடிக்கப்பட்டதாகவும் மாலி மற்றும் நைகரில் அமெரிக்கா “இழுத்துச் செல்லப்பட்டதாகவும்” பக்தாதியின் அந்த ஓடியோ பதிவில் கூறப்பட்டிருந்தது.

ஐ.எஸ் குழு தனது அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தபோது ஈராக் தலைநகர் பக்தாதின் புறநகர் பகுதி தொடக்கம் யூப்ரடிஸ் மற்றும் டைக்ரிஸ் பள்ளத்தாக்கை ஒட்டிய கிராமங்கள் மற்றும் நகரங்கள் ஊடாக வடக்கு சிரியா வரை பல மில்லியன் மக்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது.

எனினும் 2017 இல் ஈராக் மற்றும் சிரியாவில் தனது கோட்டைகளான முறையே மொசூல் மற்றும் ரக்கா நகரங்களை இழந்த ஐ.எஸ், ஈராக் மற்றும் சிரியா எல்லையில் உள்ள பாலைவன பகுதிக்கு சுருங்கியது.

சர்வதேச அளவில் அதிகம் தேடப்படும் நபராக அபூபக்கர் அல் பாக்தாதி உள்ளார்.

அவரது தலைக்கு 25 மில்லியன் அமெரிக்க டொலர் விலை அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் எங்கே இருக்கிறார் என்பது பெரும் மர்மமாகவே இருந்து வந்தது.

திட்டமிட்ட கொடிய யுத்த தந்திரங்களை வகுப்பவராக பக்தாதி பெயர்பெற்றுள்ளார். வடக்கு பக்தாதின் சமர்ரா நகரில் 1971 இல் பிறந்த பக்தாதியின் உண்மைப் பெயர் இப்ராஹிம் அவாத் அல் பத்ரி என்பதாகும்.

2003 இல் அமெரிக்கா ஈராக் மீது படையெடுத்தபோதும் பக்தாதி பள்ளிவாசல் ஒன்றில் மாதப் போதகராக இருந்து வந்தார் என்று நம்பப்படுகிறது.

எனினும் ஈராக் முன்னாள் தலைவர் சதாம் ஹுஸைன் காலத்திலேயே அவர் ஜிஹாத் போராட்டக் குழுவொன்றுடன் தொடர்புபட்டிருந்ததாக சில செய்திகள் கூறுகின்றன.

பல அல் கொய்தா தலைவர்களும் தடுத்து வைக்கப்பட்ட அமெரிக்கா கட்டுப்பாட்டில் இருந்த பக்கா முகாமில் கழித்த நான்கு ஆண்டுகளிலுமே பக்தாதி பயங்கரவாத சிந்தனைகளால் தூண்டப்பட்டதாக மேலும் சிலர் கூறுகின்றனர்.

மற்ற ஜிஹாதித் தலைவர்களைப் போலல்லாமல் பாக்தாதி, மிக அதிகத் தேவை இருந்தால் மட்டுமே பொதுவெளியில் தோன்றவோ அல்லது பேசவோ செய்திருக்கிறார். மொசூலில் 2014இல் தன்னிச்சையாக கலீபத்தை பிரகடனம் செய்தபோதே பக்தாதி முதல்முறை வீடியோ ஒன்றில் தோன்றியதோடு அதற்கு பின் இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே தனது வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

Mon, 10/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை