மலையக மக்களுக்கான மறுமலர்ச்சி; 12 அம்சக் கோரிக்கை சஜித்திடம் கையளிப்பு

மலையக மக்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் சுகாதாரம், கல்வி,வாழ்வாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு செயற்பாடுகளை உள்ளடக்கிய 12 அம்சக் கோரிக்கையை ஐ.தே. க. ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம் கையளித்துள்ளதாக பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

ஐ.தே.க. தொழிற்சங்கமான தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் என்ற வகையில் மலையக மக்களின் முன்னேற்றத்துக்காக மேற்படி 12 அம்சக் கோரிக்கையை தாம் சஜித்திடம் கையளித்ததாகவும் அதனை தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அவர் சேர்த்துக்கொள்ளவதாக உறுதியளித்ததாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

நேற்றைய தினம் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் தெரிவிக்கையில்,

மலையக மக்களுக்கான அபிவிருத்தி தொடர்பில் ஐ.தே.க. ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ என்னிடம் யோசனைகளைக் கேட்டிருந்தார். அதற்கிணங்கவே மேற்படி 12 அம்சக் கோரிக்கை தயாரிக்கப்பட்டு கையளிக்கப்பட்டது.

அதற்கிணங்க மலையகத்துக்கென தனியான பல்கலைக்கழகம், பதுளையில் கல்வியியற் கல்லூரி, மூடப்பட்டுள்ள தேயிலைத் தொழிற்சாலைகளை தொழிற்பயிற்சி நிலையங்களாக்குவது, அரச வைத்தியசாலைகளை மேம்படுத்துவதுடன் தேவையான வைத்தியர்கள், அம்புலன்ஸ்கள் குறிப்பிட்ட ஆளணியைப் பெற்றுக் கொடுப்பது, தேயிலைத் தோட்டங்களை 5, 6 ஏக்கர் எனப் பிரித்து சிறு தேயிலைத் தோட்டங்கள் உருவாக்கப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்குக் கையளிப்பது, உல்லாசப் பிரயாணத்துறையை மேம்படுத்தவது, மூத்த பிரஜைகளுக்கு கட்டாயம் சமுர்த்தி உதவியைப் பெற்றுக் கொடுப்பது, ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதியம் போன்றவற்றின் காரியாலயங்களை மலையக நகரங்களிலும் ஆரம்பிப்பது, குடி நீர், வீதி நிர்மாணம், நெடுஞ்சாலைகள் போன்றவற்றைப் பெற்றுக்கொடுப்பது உள்ளிட்ட விடயங்கள் இவற்றில் உள்ளடக்கப்பட்டுள்ளது என்றார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 10/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை