ஈரானுக்கு எதிராக அமெரிக்கா ‘உளவு ஆதாரங்கள்’ வெளியீடு

சவூதி எண்ணெய் நிலைகள் மீதான தாக்குதல்

எண்ணெய் விலை ஏற்றம்

சவூதி அரேபியாவின் எண்ணெய் நிலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னணியில் ஈரான் இருப்பதாக தனது குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக செய்மதி படங்கள் மற்றும் உளவுத் தகவல்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த வான் தாக்குதல்களின் பின்னணியில் தாம் இல்லை என்று ஈரான் நிராகரித்திருப்பதோடு, இந்த தாக்குதல்களுக்கு ஈரான் ஆதரவு யெமன் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

எனினும் தாக்குதல் வந்த திசை மற்றும் அளவை பார்க்கும்போது ஹூத்திக்களின் தொடர்பு பற்றி சந்தேகம் எழுவதாக அமெரிக்க மற்றும் சர்வதேச ஊடகங்களுக்கு பெயர் வெளியிடாத அமெரிக்க அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தால் சர்வதேச எண்ணெய் விலை 5 வீதம் உயர்ந்துள்ளது.

 

ஈரானே காரணம்

இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பொம்பியோ எந்த ஆதாரமும் வெளியிடாமல் ஈரான் மீது குற்றம்சாட்டிய நிலையில், அமெரிக்க வஞ்சகத்துடன் குற்றம்சாட்டுவதாக ஈரான் குறிப்பிட்டது.

கடந்த ஞாயிறன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ஈரான் மீது நேரடியாக குற்றம்சாட்டுவதை தவிர்த்துக்கொண்டதோடு, குற்றவாளி தெரிந்த பின் இராணுவ நடவடிக்கை ஒன்றுக்கான சாத்திம் பற்றி எச்சரிக்கை விடுத்தார்.

“இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் இருப்பவர்களின் அடையாளம் எங்களுக்குத் தெரியும் என நம்புவதற்குக் காரணம் உள்ளது. தாக்குதலுக்குக் காரணமானவர்களின் அடையாளம் குறித்து சவுூதி அரசாங்கம் கொண்டுள்ள அனுமானத்தை அறிய நாங்கள் காத்திருக்கிறோம். எந்த நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு நாம் நடக்கவேண்டும் என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்ள காத்திருக்கிறோம்” என்று டிரம்ப் ட்விட்டரில் தெரிவித்தார்.

இதனிடையே பெயர் வெளியிடாத அமெரிக்க அதிகாரி ஒருவர் நியூயோர்க் டைம்ஸ், ஏ.பி.சி மற்றும் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனங்களுக்கு பேசியுள்ளார்.

இலக்குகள் மீதான 19 புள்ளிகள் இருப்பதாகவும் அது ஹூத்திக்கள் கூறுவது போல் ஆளில்லா விமானங்கள் மூலம் நடத்தப்பட்டிருக்க சாத்தியம் இல்லை என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று தாக்குதலானது ஹூத்திக்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் யெமனில் இருந்தன்றி மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் இருந்து வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான எண்ணெய் நிலைகளின் தென் மேற்காகவே யெமன் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி இந்த தாக்குதலுக்கான ஏவுதளம் வளைகுடாவின் வடக்காக ஈரான் அல்லது ஈராக்காக இருப்பதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். சேதமடைந்திருக்கும் அப்கைக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் நெருக்கமான படங்களில் தாக்குதல் புள்ளி மேற்கு பக்கமாக உள்ளது.

ஆளில்லா விமானங்கள் மற்றும் குரூஸ் ஏவுகணைகள் கலந்ததாக இந்த தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என்று நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு குறிப்பிட்டிருக்கும் அமெரிக்க அதிகாரி, அவை அனைத்தும் அப்கைக் மற்றும் குரைஸ் எண்ணெய் வயலில் இலக்குகளை தாக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானே இதற்கு பொறுப்பு என்பதை டிரம்ப் முழுமையாக தெரிந்திருப்பதாக அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் ஏ.பி.சி தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்.

 

எண்ணெய் விலை உயர்வு

இந்த தாக்குதலுக்கு பின் உலகளாவிய மசகு எண்ணெய் விலை உச்சம் கண்டுள்ளது. ப்ரெண்ட் மசகு எண்ணெய் விலை 10 வீதமாக உயர்ந்து பீப்பாய் ஒன்று 66.28 டொலர்களாக பதிவாகியுள்ளது. 1988 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒரு நாள் இடைவெளியில் பதிவான மிகப்பெரிய விலையேற்றம் இதுவென்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிய வர்த்தகத்தில் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட் 8.9 வீதம் உயர்ந்து 59.75 டொலர்களாக பதிவானது. எனினும் அமெரிக்க இருப்பை விடுவிப்பதற்கு ஜனாதிபதி டிரம்ப் அனுமதி அளித்ததை அடுத்து விலைகள் சற்று குறைந்தன. உலகளவில் சவூதி அரேபியா மிகப் பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடாக உள்ளது. நாள் ஒன்றுக்கு ஏழு மில்லியன் பீப்பாய்களை அந்நாடு ஏற்றுமதி செய்கிறது.

தாக்கதலுக்கு பின்னர் அரம்கோ எண்ணெய் நிறுவனத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் தினமும் 5.7 மில்லியன் பீப்பாய் மசகு எண்ணெய் தயாரிப்பு பாதிக்கப்படும் என சவூதியின் ஆற்றல் துறை அமைச்சர் இளவரசர் அப்துலாசிஸ் பின் சல்மான் தெரிவித்துள்ளார்.

இது சவூதி அரேபியாவின் மொத்த உற்பத்தியில் பாதியளவாகும்.

அப்கைக் எனும் இடத்தில் அமைந்துள்ள அரம்கோ நிறுவனத்தின் மிகப்பரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் குராய்ஸ் எனும் இடத்தில் உள்ள எண்ணெய் வயல் ஆகியவற்றில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

அப்கைக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உலகின் பயன்பாட்டுக்கு தேவையான 7 வீத பெட்ரோலிய எண்ணெய் உற்பத்தியைச் சுத்திகரிக்கும் வசதி உள்ளது. குராய்ஸ் எண்ணெய் வயலிலேயே உலக அளவில் உற்பத்தியாகும் மசகு எண்ணெய்யில் 1 வீதம் கிடைக்கிறது. இந்த தாக்குதலில் சர்வதேச எண்ணெய் இருப்பு கிட்டத்தட்ட ஐந்து வீதம் குறைந்துள்ளது.

எண்ணெய்ச் சந்தைகளுக்கு இது மிகப் பெரிய இழப்பாக உள்ளது. 1990ஆம் ஆண்டில் குவைட்டின் மீது சதாம் ஹுசைன் நடத்திய படையெடுப்பின்போதும் 1979ஆம் ஆண்டில் ஈரானின் இஸ்லாமியப் புரட்சியின்போதும் ஏற்பட்ட எண்ணெய் இழப்பைக் காட்டிலும் இப்போது பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் எரிபொருள் துறை தெரிவித்துள்ளது.

எண்ணெய் உற்பத்தியை சவூதி அரேபியா சில நாட்களிலேயே தொடங்கலாம் என்றாலும் முழு ஆற்றலில் செயல்படுவதற்கு சில வாரங்கள் எடுக்கக்கூடும் என்று இது குறித்து விபரம் அறிந்தவர்கள் தெரிவித்தனர்.

 

ஈரானுடனான பதற்றம்

கடந்த வருடம் ஈரானின் அணு ஆயுத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தம் ஒன்றை டிரம்ப் நிராகரித்து அந்நாட்டின் மீதான தடையை நீடித்ததால் இருநாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நீடித்து வருகிறது.

அமெரிக்கா முன்வைத்திருக்கும் இந்த புதிய குற்றச்சாட்டுகள் குறித்து ஈரான் இன்னும் பதிலளிக்கவில்லை. எனினும் ஈரான் மீது உச்சபட்ச அழுத்தம் கொடுப்பதில் தோல்வி அடைந்த அமெரிக்கா உச்சபட்ச வஞ்சகத்தை வெளிப்படுத்துவதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் ஜாவத் சாரிப் ஞாயிறன்று ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

ஈரான் மீது உச்சபட்ச அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கையை முன்னெடுப்பதாக டிரம்ப் கூறியது பற்றியே சாரிப் இதன்போது குறிப்பிட்டு கூறினார். “ஈரான் மீது குற்றம் சுமத்துவதால் யெமனில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பேரழிவு நின்றுவிடாது” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே ஈரான் முழுமையான யுத்தம் ஒன்றுக்கு தயாராக இருப்பதாக ஈரானிய புரட்சிக் காவல் படையின் சிரேஷ்ட தளபதி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

“அமெரிக்காவின் அனைத்து தளங்கள் மற்றும் விமானதாங்கி கப்பல்களும் ஈரானை சூழ எமது ஏவுகணைகள் எட்டும் 2,000 கிலோமீற்றருக்குள் தான் இருக்கின்றன” என்று கட்டளைத் தளபதி அமீரலி ஹாஜசதா குறிப்பிட்டுள்ளார்.

 

ஹூத்திக்கள் பொறுப்பு

எனினும் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியா மீது கடந்த காலங்களில் தொடர்ச்சியாக ரொக்கெட், ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்த தாக்குதல்களில் இதுவரை குறைந்தது நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஹூத்தி ஷியா கிளர்ச்சியாளர்கள் யெமன் நாட்டின் மேற்கின் பெரும்பகுதியை கைப்பற்றி ஜனாதிபதி அப்த்ரப்பு மன்சூர் ஹதி வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நிலையில் கடந்த 2015 மார்ச் தொடக்கம் அங்கு உள்நாட்டு போர் நீடித்து வருகிறது.

ஹூத்திக்களுக்கு ஈரான் ஆதரவு அளித்து வரும் நிலையில் யெமன் அரசுக்கு சவூதி தலைமையிலான கூட்டணி ஒன்று ஆதரவாக அங்கு நீடிக்கும் உள்நாட்டு யுத்தத்தில் தலையிட்டுள்ளது.

இந்த யுத்தத்தால் குறைந்தது 7,290 பொதுமக்கள் கொல்லப்பட்டு மக்கள் தொகையில் 80 வீதமான 24 மில்லியன் மக்கள் மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் நிலையில் இருப்பதாக ஐ.நா குறிப்பிடுகிறது. இவர்கள் 10 மில்லியன் மக்கள் உயிர் பிழைப்பதற்கு உணவு உதவி தேவைப்படும் நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

சவூதி அரேபியாவுக்குள் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திய மிகப்பெரிய தாக்குதல் இது என்றும், “சவூதி அரசாங்கத்தில் உள்ள மரியாதைக்குரிய மனிதர்களின் உதவியுடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது” என்றும் ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Tue, 09/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை