பொத்துவில் பிரதேச சபையினால் கழிவு சேகரிப்பு தொட்டிகள் வழங்கிவைப்பு

பொத்துவில் பிரதேச சபை நடைமுறைப்படுத்தும் குப்பை கூளங்களை தரம் பிரித்து அகற்றும் வேலைத்திட்டத்தின் கீழ் பொது மக்கள் நலன் கருதி புதிய கழிவு சேகரிப்பு தொட்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாசித் தெரிவித்தார்.

இதற்கென கிழக்கு மாகாண சபையினால் 05 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவு செய்யப்பட்ட 264 பயனாளிகளுக்கு கழிவு சேகரிப்பு தொட்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

'நிலையான தூய நகரத்தை நோக்கி' எனும் புதிய திட்டத்தின் கீழ் கழிவுகளை தரம் பிரித்து அகற்றும் பணிக்கு மேலதிகமாக சேர்த்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் இரண்டு வகை கழிவுகளை சேகரிப்பதற்காக 02 வகை நிறத்தொட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டு கேந்திர முக்கியத்துவ மிக்க இடங்களில் வைக்கப்பட்டுள்ளதோடு பொது மக்களுக்கு வெள்ளிக்கிழமை (30) பொத்துவில் பிரதேச சபையில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மஞ்சள் நிறத் தொட்டியில் உக்காத கழிவுப் பொருட்களையும் பச்சை நிறத் தொட்டியில் உக்கக் கூடிய கழிவுப் பொருட்களையும் போடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்பின் பேரில் பொத்துவில் பிரதேசத்தில் குப்பைகூளங்களை உக்கும் கழிவு, உக்காத கழிவு என தரம் பிரித்து அகற்றும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து நடைமுறைப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

பொது மக்கள் அன்றாடம் சேரும் குப்பைகளை தரம் பிரித்து சேகரித்து பிரதேச சபை ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டுமெனவும் வீதிகளில் குப்பைகளை கொட்டுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் குறிப்பிட்டார்.

 

ஒலுவில் விசேட நிருபர்

Mon, 09/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை