ஈரான் ஆதரவு போராளிகள் மீது சிரியாவில் சரமாரி வான் தாக்குதல்

சிரியாவின் ஈராக் நாட்டு எல்லையை ஒட்டிய பகுதியில் ஈரான் ஆதரவு போராளிகள் மீது வான் தாக்குதல் ஒன்று இடம்பெற்றிருப்பதாக செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் 18 ஈரான் மற்றும் ஈரான் ஆதரவு போராளிகள் கொல்லப்பட்டதாக பிரிட்டனை தளமாகக் கொண்டு செயற்படும் மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

அல்பு கமால் நகரைச் சூழ கடந்த ஞாயிறு இரவு இடம்பெற்றிருக்கும் இந்த தாக்குதலை யார் நடத்தினர்கள் என்பது தெரியாமல் உள்ளது. எனினும் சிரிய உள்நாட்டு யுத்தத்தில் ஈரானிய இலக்குகள் மீது இஸ்ரேல் நூற்றுக்கணக்கான தாக்குதல்களை நடத்தியுள்ளது. சிரியாவில் ஈரான் இராணுவத்தின் பலத்தை குறைக்கவும் லெபனான் ஹிஸ்புல்லா போராளிகளிடம் ஈரானிய ஆயுதங்கள் செல்வதை தடுக்கவுமே இஸ்ரேல் இவ்வாறான தாக்குதல்களை நடத்தி வருகிறது.

அல்பு கமால் பகுதியில் ஈரான் ஆதரவு போராட்டக் குழுவான அல் ஹிசாம் அல் அக்தர் குழுவுக்கு சொந்தமான இராணுவத் தளங்கள், ஆயுதக் கிடங்குகள் மற்றும் வாகனங்கள் மீது போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக கண்காணிப்புக் குழு குறிப்பிட்டுள்ளது.

நகரெங்கும் இருந்து 24 சக்திவாய்ந்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. இந்த தாக்குதல்கள் இடம்பெற்று சில மணி நேரங்களின் பின் சிரிய தலைநகரின் புறநகர் பகுதிகளில் இருந்து இஸ்ரேலை நோக்கி ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. எனினும் அவை இஸ்ரேலிய நிலப்பகுதியை தாக்க தவறியதாக இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

Tue, 09/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை