எந்த நிபந்தனைக்கும் அடிபணிய மாட்டேன்

நாட்டை கட்டியெழுப்ப போட்டியிடும் ஒரே வேட்பாளர் நான்

நிபந்தனைகளுடன் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட நான் ஒருபோதும் தயாரில்லையென ஐ.தே.க பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

எனக்கு ஜனாதிபதி பதவியை விட சுயகௌரவம் பிரதானமானது. வரலாற்றில் முதன் முறையாக எந்த ஒரு நிபந்தனைக்கும் அடிபணியாமல் நாட்டை கட்டியெழுப்புவதற்காக போட்டியிடும் ஒரே வேட்பாளர் சஜித் பிரேமதாஸ எனவும் குறிப்பிட்டார்.

ஐ.தே.க.பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு வரவேற்பளிக்கும் கூட்டம் நேற்று மாலை மத்துகம பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதன் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் உரையாற்றுகையில்,

என்னை கைப்பொம்மையாக கருதி ஆட்டிவைக்க யாராலும் முடியாது. மக்களின் ஆணையை தனக்கு வழங்கினால் அதனை உயிருக்கும் மேலாக பாதுகாத்து முழு நாட்டு  மக்களினதும் நலனுக்காகவே பிரயோகிக்கப்பேன்.

நிபந்தனைகளுடனே சஜித் பிரேமதாஸவேட்பாளராக களமிறக்குவதாக நாடு முழுவதும் பிரசாரம் செய்யப்படுகிறது. தாய்நாடு குறித்தும் மக்கள் குறித்தும் சிந்தித்தே நான் அரசியலுக்கு வந்தேன். சஜித் பிரேமதாஸ யாரினதும் கைப்பொம்மையாக இருக்கப் ​போவதில்லை. சஜித்திற்கு தனித்துவமான மனதும் அவயங்களும் இருக்கிறது.

எனது எண்ணங்கள் குணங்கள் என்பவற்றை எனது மனச்சாட்சி தான் வழிநடத்துகிறது. நிபந்தனைகளுடனான அரசியல் பயணத்திற்கு நான் ஒரு போதும் தயாராக இல்லை. நிபந்தனைகளுக்கு தலைசாய்த்து பயந்த கோழைத்தனமாக அரசியல்வாதியாக செயற்பட ஆர்.பிரேமதாஸவின் மகன் ஒருபோதும் தயாராக இல்லை.

அந்த நிபந்தனைக்கும் இந் நிபந்தனைக்கும் அடிபணிந்ததாக செய்திகள் பரப்பப்பட்டுள்ளன. எனக்கு ஜனாதிபதி பதிவியை விட சுயகௌரவம் பிரதானமானது. உயர் பதவிகளுக்காக சுயகௌரவத்தையும் நாட்டையும் காட்டிக் கொடுக்க மாட்டேன்.

என்னை கைப்பொம்மையாக கருதி ஆட்டிவைக்க யாராலும் முடியாது. அக்காலம் மலையேறிவிட்டது. என்னை விடவும் குடும்பத்தை விடவும் தாய்நாட்டுக்கு முன்னுரிமை வழங்கி செயற்படும் காலத்தை இணைந்து உருவாக்க பாடுவேன்.

எனக்கு ஏதாவது பதவி கிடைப்பதாக இருந்தால் அதற்காக எனது கொள்கைகளை விட்டுக் கொடுக்க மாட்டேன். எனது கொள்கைக்காக அவற்றை இழக்க நேரிட்டாலும் கவலைப்பட மாட்டேன்.எனது கொள்கைகளுக்காக எனக்கு சந்தர்ப்பம் வழங்காவிட்டாலும் கவலைப்படப் போவதில்லை.

நாடு முழுவதும் வாழும் 220 இலட்சம் மக்கள் தான் எனது குடும்ப உறவினர்களாகும். எனவே யாரும் எவருக்கு அஞ்சத் தேவையில்லை. உங்கள் ஆணையை எனக்கு வழங்கினால் அதனை உயிருக்கும் மேலாக பாதுகாப்பேன். மக்கள் ஆணையை தனிப்பட்ட நலனுக்காக அன்றி முழு நாட்டு மக்களினதும் நலனுக்காகவே பிரயோகிப்பேன். மக்களின் ஆணையை, ஆசிர்வாதத்தை எனக்கு வழங்குமாறு வேண்டுகிறேன். லங்கா பஸ்ட் (Sri Lanka first) எனும் கொள்கை திட்டத்தினூடாக சர்வதேச ரீதியில் வெற்றிகரமான நாடாக இலங்கையை மாற்றுவேன் என்றார்.

Thu, 09/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை