கடன்பெறுவதில் சிக்கல் என்றால் உடன் அறிவியுங்கள்:

யாழ்.என்ரபிரைஸ் லங்கா பெரும் வெற்றி

அரசாங்க அதிபர்

நிறைவு நாளான  நேற்றும்  பெருந்திரளானோர்  பங்கேற்பு

யாழ். என்ரபிரைஸ் ஸ்ரீலங்கா (தொழில்முனைவோர் கண்காட்சி) எதிர்பார்த்ததை விட பெரும் வெற்றியைத் தந்திருப்பதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தினகரனுக்குத தெரிவித்தார்.

இந்த கண்காட்சியை மேலும் 3 தினங்களுக்கு நீடிக்குமாறு பொது மக்கள் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்ததன் மூலம் மக்களுக்கு இந்த கண்காட்சி மீதுள்ள ஆர்வம் புலப்படுவதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

தொழில் முனைவோர் கண்காட்சியின் நிறைவு நாளான நேற்று மாலை அரசாங்க அதிபர் கண்காட்சி கூடங்களை பார்வையிட வந்தார். அப்போது, கண்காட்சியை மேலும் 3 தினங்களுக்கு நீடித்து தருமாறு பல எழுத்து மூல கோரிக்கைகள் அவரிடம் முன்வைக்கப்பட்டன. தினகரன் காட்சிக்கூடத்திற்கு வருகை தந்த அவர் இந்த கண்காட்சி, யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக நடத்தப்படுவதால்,

 

ஆரம்பத்தில் மக்களுக்கு அது பற்றிய தெளிவு இருக்கவில்லை என்றும், ஆனால், இரண்டாம் நாளுக்குப் பின்னர் இலட்சக்கணக்கான மக்கள் வருகை தந்து இதன் பயனைப் பெறுவதற்கு ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள் என்று தெரிவித்தார்.

தொழில்முனைவோர் கடன் திட்டத்தின் மூலம் யாழ்.குடாநாட்டில் இதுவரை 112 மில்லியன் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அரசாங்க அதிபர், இந்த கண்காட்சியின் மூலம் தொழில்முனைவோருக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாகவும், அதன் ஊடாக பெருமளவானோருக்கு கடனைப் பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்பு ஏற்படுமென்று நம்பிக்கை தெரிவித்தார்.

கடன் பெறுவதில் ஏதாவது சிக்கல்களை எதிர்நோக்க நேரிட்டால், அது பற்றி உடனடியாக பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வருமாறும் கேட்டுக்கொண்டார். முறைப்பாடுகளுக்கு அமைய உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். என்ரபிரைஸ் கண்காட்சி மீண்டும் யாழ்ப்பாணத்தில் நடத்த வேண்டுமென்ற கோரிக்கை வலுவடைந்து அது சம்பந்தப்பட்டவர்களின் காதுகளுக்கு எட்டும் பட்சத்தில் கண்காட்சியை மீண்டும் யாழ்ப்பாணத்தில் காணக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு உடையார் கட்டு மகாவித்தியாலயம், சாவகச்சேரி இந்துக் கல்லூரி, மன்னார்.புனித சேவியர் கல்லூரி, கிளிநொச்சி மகா வித்தியாலயம், முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி, கிளிநொச்சி ஐயனார்புரம், ஊறனி தமிழ் வித்தியாலயம், சுன்னாகம் தமிழ் வித்தியாலயம், அராலி இந்துக் கல்லூரி, உடுப்பிட்டி அமெரிக்க மிசன் பாடசாலை, மண்டதீவு மகா வித்தியாலயம், நாவற்குழி மகா வித்தியாலயம், யாழ்.மத்திய கல்லூரி, யாழ்.விக்டோறியா கல்லூரி, சுழிபுரம் வித்தியாலயம், கோப்பாய் கல்லூரி, உடுப்பிட்டி விக்னேஸ்வரா கல்லூரி, வவுனியா தேசிய பாடசாலை, கிளிநொச்சி திருவையாறு, கிளிநொச்சி இந்துக் கல்லூரி உட்பட பல்கலைக்கழக மாணவர்களும் பெரும் திரளானோரும் நேற்று கண்காட்சியைப் பார்வையிட்டனர்.

நேற்று இரவும் 7 மணிமுதல் 10 மணிவரை சுப்பர் சிங்கர் பாடகர்களின் இசைக் கச்சேரிகளும் நடைபெற்றன.

 

- யாழ்ப்பாணத்திலிருந்து விசு கருணாநிதி, கே. அசோக்குமார், சுமித்தி தங்கராசா

Wed, 09/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை