பயங்கரவாதிகளின் 6 பில்லியன் ரூபா சொத்துக்கள் முடக்கம்

41 பயங்கரவாத சந்தேக நபர்களின் 100 வங்கிக் கணக்குகளுக்கு தடை

*ஏப்.21 தாக்குதலுடன் தொடர்பு: 293 பேர் கைது

* 178 பேர் தடுப்புக்காவலில்

உயிர்த்த ஞாயிறுதினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய 293 பேர் இதுவரை கைதுசெய்யப் பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

இவர்களில் 115 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் 178 பேர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு நிதியுதவியளித்த சந்தேகத்தின் பேரில் 41 பேரின் 100 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு, அந்தக் கணக்குகளிலிருந்த 134 மில்லியன் ரூபாநிதியும் தடை செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களின்

ஆறு பில்லியனுக்கும் அதிகமான மொத்த சொத்துக்களை தடை செய்வதற்கான நடவடிக்கைளும் எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், தாக்குதல்களை நடத்தியவர்களுடன் தொடர்புடைய அல்லது உதவியளித்தவர்களது 2919 தொலை பேசிகளை ஆய்வுக்கு உட்படுத்தியத்தில் பல்வேறு தரவுகள் பெறப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பில் அமைந்துள்ள பொலிஸ் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

உயிர்த்த ஞாயிறுதினத்தன்று கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல் தொடர்பில் குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவு நடத்திவரும் விசாரணைகளுக் கமைய சம்பவத்தில் காயமடைந்த 81 பேரின் வாக்குமூலங்கள் இதுவரை பெறப்பட்டுள்ளன. மேலும் காயமடைந்த 7 பேர் தொடர்பில் தகவல்கள் கிடைத்திருந்தன. இவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர். விசாரணைகளை இறுதிப்படுத்த அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட வேண்டியது கட்டாயமாகவுள்ளது.

அவர்களின் பெயர் விபரங்கள் வருமாறு, திலீப் ராஜ் (டிக்கோயா), ஜயசுதேவன் (நமுனுகல), லக்ஷானா (லிந்துலை), எம்.ஸ்டென்லி (நோர்வூட்), எஸ்.ஆர்.பெர்ணாந்து (தலங்கம வீதி, கடுகன்னாவ) இந்த ஐந்து பேரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர். ஏனைய இருவரும் களுபோவில வைத்தியசாலையில் சிக்கிச்சை பெற்றுள்ளனர். அலெக்ஸென்டர் ஸ்டார்ஸ் கிங் ( பொகவந்தலாவை கீழ் பிரிவு, பொகவந்தலாவ) , விக்டர் (புங்குடுதீவு) ஆகிய ஏழு பேர் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருகிறது.

இவர்கள் ஏழு பேரை போன்று பயங்கரவாதத் தாக்குதலில் காயமடைந்து வாக்குமூலம் பெற்றுக்கொடுக்காதவர்கள் இருந்தால் உடனடியாக தொடர்புகொண்டு வாக்குமூலத்தை அளிக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம். 0112392900 என்ற குற்றத்தடுப்பு பிரிவின் விசேட செயலணியின் இலக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்தி வாக்குமுலங்களை வழங்குவதற்கான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள், பயங்கரவாதிகளுக்கு உதவியளித்த மற்றும் தடைசெய்யப்பட்டுள்ள இயக்கங்களுடன் தொடர்புடைய, பயிற்சி முகாம்களில் பயிற்சியை பெற்றவர்கள் என்ற அடிப்படையில் 293 பேர் நாடு முழுவதும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 293 பேரில் 115 பேர் தொடர்பில் நீதிமன்றில் விசாரணைகள் முடிவுற்றுள்ளன. இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஏனைய 178 பேரும் தடுத்துவைக்கும் உத்தரவின் பேரில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்தில் 62 பேரும், பயங்கரவாத விசாரணைப் பிரிவில் 47 பேரும், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் 41 பேரும், அம்பாறை பிரிவில் 16 பேரும், கல்கிசை பிரிவில் 4 பேரும், கொழும்பு தெற்கு பிரிவில் 4 பேரும், நுகேகொடை பிரிவில் 3 பேரும், கண்டி பிரிவில் ஒருவரும் இவ்வாறு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களம் மேற்கொண்டுவரும் விசாரணைகளில், பயங்கரவாதத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மற்றும் அவர்களுக்கு உதவியளித்த சந்தேகநபர்களின் சொத்துகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளில் 41 சந்தேகநபர்களின் 100 வங்கிக்கணக்குகள் இதுவரை முடக்கப்பட்டுள்ளன. இந்தக் கணக்குகளிலிருந்த 134 மில்லியன் நிதியும் முடக்கப்பட்டுள்ளது. அதேபோன்று அவர்களிடமிருந்த 20 மில்லியனுக்கும் அதிகமான நிதியை குற்றத்தடுப்பு விசாரணைத் திணைக்களம் கைப்பற்றியுள்ளது. 6 பில்லியனுக்கு அதிகமான மொத்த சொத்துகள் (கட்டிடங்கள், காணி, வாகனங்கள் மற்றும் ஏனையவவை) தொடர்பிலும் குற்றத்தடுப்பு விசாரணை பிரிவு கண்டறிந்துள்ளதுடன், அவற்றை தடை செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 09/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை