தெரிவுக்குழு முன்னிலையில் 20 இல் ஜனாதிபதி சாட்சியம்

ஜனாதிபதி செயலகத்தில் அமர்வு - தெரிவுக்குழுவின் காலத்தை மேலும் 2 வாரம் நீடிக்கவும் முடிவு

ஷம்ஸ் பாஹிம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் விசேட பாராளுமன்ற தெரிவுக் குழு முன்னிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன எதிர்வரும் 20 ஆம் திகதி சாட்சியமளிக்கிறார்.அன்றைய தினம் காலை 10.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர் சாட்சியமளிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவுக் குழு தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிரி தெரிவித்தார். இதே வேளை விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் காலத்தை 2 வாரங்களினால் நீடிக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆளும் தரப்பு எதிர்த்தரப்பு எம்.பிக்களின் கோரிக்கைக்கு அமைய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த உண்மைகளை கண்ட றிவதற்காக

சபாநாயகரினால் கடந்த மே மாதம் விசேட தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது.இதன் முதலாவது அமர்வு மே 29 ஆம் திகதி இடம்பெற்றது. இதில் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க, அமைச்சர்களான சாகல ரத்னாயக்க, ரஞ்சித் மத்தும பண்டார, ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன,முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, பொதுநிர்வாக அமைச்சுக்களின் தற்போதைய மற்றும் முன்னாள் செயலாளர்கள்,இராணுவ தளபதி, புலனாய்வு பிரதானிகள், முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே. இளங்ககோன் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைவர் எம்.ஐ.எம். ரிஸ்வி உட்பட பலர் கடந்த 3 மாத காலமாக இங்கு சாட்சியமளித்தார்கள்.

ஜனாதிபதியையும் சாட்சி விசாரணைக்கு அழைக்க தெரிவுக்குழு முடிவு செய்திருந்ததோடு இதற்காக அவருக்கு அண்மையில் எழுத்து மூலம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவரை ​நேரில் சென்று சந்தித்தும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் 20 ஆம் திகதி சாட்சியமளிக்க ஜனாதிபதி விருப்பம் தெரிவித்துள்ளார். இதேவேளை தெரிவுக்குழுவின் பதவிக் காலம் எதிர்வரும் 30 ஆம் திகதி முடிவடைய உள்ள நிலையில் அதன் அறிக்கை தயாரிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் அறிக்கை கையளிக்க திட்டமிட்டிருந்ததாக கூறிய பிரத சபாநாயகர், அன்றைய தினம் ஜனாதிபதி சாட்சியமளிக்க இருப்பதால் அடுத்த மாத முதற்பகுதியிலே சபாநாயகரிடம் அறிக்கை கையளிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் சாட்சியத்தையும் உள்ளடக்கி முழுமையான அறிக்கையொன்றை கையளிப்பதற்காக மேலும் இரு வார கால அவகாசம் கோர இருப்பதாக கூறிய அவர் அடுத்த பாராளுமன்ற அமர்வில் இதற்கு பாராளுமன்ற அனுமதி பெற எதிர்பார்பதாக தெரிவித்தார்.

பாராளுமன்ற தெரிவிக்குழுவில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க, ராஜித சேனாரத்ன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா, ஆசு மாரசிங்க, எம்.ஏ. சுமந்திரன் மற்றும் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் அங்கம் வகிப்பதோடு இவர்களும் தெரிவுக்குழு அதிகாரிகளும் 20 ஆம் ஜனாதிபதி செயலகத்திற்கு செல்ல உள்ளனர். அங்கு தெரிவுக்குழு கூட்டத்தை ஒருநாள் மாத்திரம் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பிரதி சபாநாயகர் கூறினார்.(பா)

 

Mon, 09/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை