என்டபிரைஸ்: கடன் வழங்குவதை இலகுபடுத்துமாறு அறிவுறுத்தல்

விதவைகள், முன்னாள் போராளிகளுக்கு பிணையாளர்கள் அவசியமில்லை

யாழ்ப்பாணத்திலிருந்து கே. அசோக்குமார், விசு கருணாநிதி

என்டபிரைஸ் லங்கா திட்டத்தின் மூலம் அரச வங்கிகளில் 15 இலட்சம் ரூபாய் வரை கடனைப் பெற்றுக்கொள்வதற்குப் பிணை அவசியமில்லை என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர நேற்று யாழ்ப்பாணத்தில் அறிவித்தார்.

வட மாகாணத்தின் இளைஞர் யுவதிகளுக்கு உதவும் முகமாக நடத்தப்படும் என்டபிரைஸ் சிறிலங்கா திட்டத்தைப் பார்வையிடுவதற்காக விஜயம் செய்த அமைச்சர் மங்கள சமரவீர, நேற்று யாழ்ப்பாணத்தில் அரச அதிகாரிகளுடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் நடத்திய சந்திப்புகளின் போது, இந்தத்திட்டத்தின் ஊடாகக் கடனைப் பெற்றுக்கொள்வதற்குப் பிணை கோரப்படுவதாகவும், பிணையாளர்களைத் தேடுவதற்குத் தாம் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டதற்கிணங்க அமைச்சர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

அதன்படி, 15 இலட்சம் ரூபாய் வரை கடன் பெறுவதற்குப் பிணை கோர வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். மேலும் விதவைகளுக்குக் கடன் வழங்குவதில் அவர்களைச் சிரமத்திற்கு உள்ளாக்க வேண்டாம் என்று பிணையாளர்கள் இருவரைக் கோருவதிலிருந்து விலக்களிக்குமாறும் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

அதேவேளை முன்னாள் போராளிகளுக்கும் பிணையாளர்கள் அவசியம் இல்லை என்றும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். யாழ் கச்சேரியில் விதவைகள் மற்றும் சிறிய தொழில் முயற்சியாளர்களைச் சந்தித்த அமைச்சர், நிதியமைச்சின் செயலாளர்.

திறைசேரியின் உயர் அதிகாரிகள். யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் முதலானோருடன் தனியான சந்திப்பையும் மேற்கொண்டார்.

யாழ்ப்பாண மக்களுக்கு உதவுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

காணாமற் போனவர்களின் குடும்பங்கள் ஒவ்வொருவருக்கும் மாதாந்தம் 6 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும், எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் இந்த கொடுப்பனவு வழங்கப்படுமென்றும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

இந்தக் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளவும் காணாமற் போனவர் தொடர்பான இல்லாமை சான்றிதழை பெற்றுக்கொள்ளவும் சம்பந்தப்பட்ட குடும்பங்கள் காணாமற் போனோர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டுமென்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

 

 

Mon, 09/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை