இந்தியாவிலிருந்து தாயகம் திரும்ப 11,356 பேர் விண்ணப்பம்

இந்தியாவுக்கு அகதிகளாக சென்றவர்கள் தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன், பேச்சுவார்த்தைகள் நடத்தி விரைவில் உரிய தரவுகளை திரட்டி பாராளுமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கையெடுப்பதாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்தது.

2009 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டுவரை அகதிகளாக இந்தியாவுக்கு சென்றவர்களில் 7,753 பேர் இலங்கைக்கு திரும்பியுள்ளனர். மேலும் 11,356 இலங்கைக்கு திரும்ப விண்ணப்பித்திருந்ததாகவும் அமைச்சு குறிப்பிட்டது. அத்துடன் 1949 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரையில் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு சென்றவர்களின் எண்ணிக்கை 5,10,000 பேர் எனவும் அமைச்சு தெரிவித்தது

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது, இந்தியாவுக்கு சென்றவர்கள் மற்றும் அங்கிருந்து நாடு திரும்பியவர்கள் தொடர்பாக எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கேள்வியெழுப்பினார்.

இக் கேள்விக்கு அமைச்சு சார்பில் அரச தரப்பு பிரதம கொரடாவான அமைச்சர் கயந்த கருணாதிலக பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

1949ஆம் ஆண்டு 2,415 பேர், 1950 இல் 4,717 பேர், 1951இல் 12,000 பேர் , 1953இல் 9,323 பேர் , 1954இல் 13,377 பேர் , 1955இல் 22,871 பேர் , 1956இல் 15,985 பேர் 1963இல் 7,357 பேர் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலமாக ஆறு இலட்சம் பேர் இந்தியாவுக்கு அனுப்ப தீர்மானம் எடுக்கப்பட்டது. எனினும் இதில் 94,000 பேர் இந்தியாவுக்கு செல்ல மறுப்பு தெரிவித்துள்ளனர். ஏனைய 5,06,000 பேரில் 3, 42, 000 பேர் 1983 ஆம் ஆண்டு காலத்துக்குள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர். அத்துடன் 1983 ஆம் ஆண்டு உடன்படிக்கையில் மூலமாக 80,000 பேர் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். எனினும் அதே ஆண்டில் இந்த நாட்டில் ஏற்பட்ட இனக் கலவரத்தின் மூலமாக இந்தியாவுக்கு செல்லும் கப்பல் போக்குவரத்துகள் நிறுத்தப்பட்ட காரணத்தினால் எஞ்சிய மக்கள் தொடர்ந்தும் இலங்கையில் தங்கியிருந்தனர்.

யுத்த காலகட்டத்தில் பல்வேறு வழிகளைக் கையாண்டு அதிகளவிலான மக்கள் இந்தியாவுக்கு சென்றனர். ஆனால் எவ்வளவு எண்ணிக்கை என்ற தொகை உரிய அமைச்சிடம் இல்லை. 1983 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரையில் அகதிகளாக பலர் இந்தியாவுக்கு சென்றுள்ளனர். அவர்களின் எண்ணிக்கையும் இல்லை.

2009 ஆம் ஆண்டு தொடக்கம் 2017 ஆம் ஆண்டு வரையில் அகதிகளாக இந்தியாவுக்கு சென்றவர்களில் மீண்டும் இலங்கைக்கு திரும்ப விரும்புவதாக விண்ணப்பம் செய்தவர்களின் எண்ணிக்கை 11,356 ஆகும். அவற்றில் 7,753 பேர் இலங்கைக்கு அதிகாரபூர்வமாக வருகை தந்துள்ளனர். இதில் 2009-2011 வரையில் இலங்கைக்கு வந்தவர்களின் எண்ணிக்கை எதுவும் பதிவில் இல்லை. அதன் பின்னரான காலங்களில் எண்ணிக்கைகள் உள்ளது என்றார்.

இந்நிலையில் மீண்டும் எழுந்த உதய கம்மன்பில, இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு சென்றவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? அவர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்பி வர விரும்பவில்லை என்றால் அது குறித்து அரசாங்கம் இந்திய அரசாங்கத்திடம் கலந்துரையாடியுள்ளதா? அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன எனக் கேட்டார்.

இதற்கு அமைச்சர் பதிலளிக்கையில், இந்தியாவுக்கு சென்றவர்களின் எண்ணிக்கை என்ன என்பது இல்லை. இதனையடுத்து மீண்டும் எழுந்த உதய கம்மன்பில எம்.பி. , இங்கு இல்லை என்றாலும் இந்தியாவிடம் இருக்குமே, அவர்களிடம் யுத்த காலகட்டத்தில் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிகையை கேட்க முடியும் எனவே அதனைப்பெற்று சபையில் சமர்ப்பியுங்கள் என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 09/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை