கல்விசாரா ஊழியர்களின் போராட்டத்தால் பல்கலைக்கழகங்களின் கட்டமைப்பு சீர்குலைவு

முழு பல்கலைக்கழக கட்டமைப்பு சீர்குலைந்து காணப்படுவதால் பல்கலை கல்விசார் ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக அரசாங்கம் தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டுமென ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.

மாணவர்களில் கல்வி நடவடிக்கைகள் முற்றாக முடங்கியுள்ளன. மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம். கல்விசார் ஊழியர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்றும் அவர் கூறினார்.

பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களின் பிரச்சினைக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வை வழங்க வேண்டுமென வலியுறுத்திய சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை நேற்று சபையில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

கடந்த 10 நாட்களுக்கும் அதிகமாக பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது பிரச்சினை புதியவை அல்ல. நீண்டகாலமாக விடுக்கப்பட்டுவரும் கோரிக்கையாகும். உரிய அதிகாரிகளுடன் பலசுற்றுப் பேச்சுவார்த்தைகளை கல்விசார் ஊழியர்கள் நடத்தியுள்ளனர்.

கடந்த ஒரு வருடகாலமாக தொடர்ந்து இவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது பிரச்சினைகளை அந்த அதிகாரிகளும் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால், அவற்றுக்குத் தீர்வை முன்வைக்கவில்லை.

அரச சேவையாளர் ஒருவருக்கு சம்பளம், ஓய்வூதியம் உட்பட பல கொடுப்பனவுகள் உள்ளன. கல்விசார் ஊழியர்களுக்கு சம்பளம் மட்டுதான் உள்ளது. ஓய்வூதியம் இல்லை. கடந்தகாலத்தில் அரச சேவையாளர்களைவிட இவர்களுக்குதான் அதிகமாக சம்பளம் வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், பின்நாட்களில் அவை துண்டிக்கப்பட்டன. அரச சேவையாளர்களுக்கு முறையான சம்பள ஒழுங்குப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டன. கல்விசார் ஊழியர்களின் சேவை நாட்டில் மிகவும் உயரிய சேவைகளில் ஒன்றும். இவர்களது தேவைகளை அரசாங்கத்தால் நிராகரிக்க முடியாது.

நேற்றுடன் 11 நாட்களை இந்தப் போராட்டம் எட்டியுள்ளது. நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளும், கட்டமைப்பும் முடங்கியுள்ளன. மாணவர்களும் வெளியேறிவிட்டனர். மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம். உடனடியாக இவர்களது கோரிக்கைகளுக்கு தீர்வை வழங்க அரசாங்கமும் உயர்கல்வி அமைச்சும் நடவடிக்கையெடுக்க வேண்டும் என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 09/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை