சுதந்திர கட்சியின் தேசிய மாநாட்டில் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படும்

கூட்டணிக்கான பேச்சுக்கள் தோல்வியடைந்தால் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி நடைபெறவுள்ள தேசிய மாநாட்டில், ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

சு.கவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் செப்டம்பர் 02 இல் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வருகின்றோம்.

சு.கவின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பிலான அனைத்துக் கேள்விகளுக்கும் அன்றையதினம் விடையளிக்கப்படும். கட்சியின் அடுத்த தலைமை யார்?. ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது உட்பட பல விடயங்களுக்கு இதன்போது பதில் கிடைக்கும். எமது கட்சியினரின் நிலைப்பாட்டின் பிரகாரம்தான் நாம் செயற்படுவோம்.

பொதுஜன பெரமுனவுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்ட பின்னர் ஜனாதிபதி வேட்பாளரை அறிமுகப்படுத்துவதே பொருத்தமாக அமையும்.

எதிர்வரும் 9ஆம் திகதிவரை அதற்கு காலம் உள்ளது

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை இல்லாது செய்தால் நாடு பிளவடையும், தேசியப் பாதுகாப்புக்கு ஆபத்தென தெரிவிக்கும் கருத்துகள் பொய்யானவை. அதிகாரங்கொண்ட பிரதமர் ஒருவரின் கீழும் இதனைச் செய்ய முடியும்.

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியோடு கலந்துரையாடப்படும். இல்லாவிட்டால் தனிநபர் யோசனையாகவேனும் இதனைக் கொண்டுவருவதற்கு தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

Fri, 08/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை