25 இலட்சம் பேருக்கு ச.தொ.ச சலுகை அட்டைகள் வழங்க திட்டம்

அரச,அரச சார்பு ஊழியர், ஓய்வூதியம் பெறுவோருக்கு கூடுதல் நன்மை

அரசாங்க ஊழியர்கள், அரச சார்பு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் உள்ளிட்ட 25,00,000 மக்களுக்கு ச.தொ.ச மூலம் கழிவு விலையில் உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்ளும் வகையில் விசேட சலுகை அட்டைகளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக வர்த்தக, கூட்டுறவு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் புத்திக பத்திரன தெரிவித்தார்.

விரைவில் இந்த செயற் திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் இதன் இரண்டாம் கட்டமாக ஊடகவியலாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் மேற்படி சலுகை அட்டைகளை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து எதிர்காலத்தில் நாட்டின் அனைத்து மக்களுக்கும் மேற்படி சலுகை அட்டைகளை வழங்குவதே தமது இலக்கென்றும் அவர் தெரிவித்தார்.

அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

மேற்படி சலுகை அட்டையை உபயோகிக்கும் போது அதன் மூலம் கழிவு புள்ளிகள் வழங்கப்பட்டு உரிய சலுகைகள் மக்களை சென்றடைய வழிவகுக்கப்படும். இதற்காக உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்களின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்படும். அவ்வாறு 250 இறக்குமதியாளர்களை அழைத்து அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தேசிய செயற்பாடாக அதனை மதித்து அதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென தாம் அவர்களை கேட்டுக் கொண்டதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்க ஊழியர்கள் மற்றும் அரச சார்பு ஊழியர்கள் தமது சம்பளத்தில் 100க்கு 35 வீதாமன தொகையை உணவுப் பொருட்களுக்காகவே செலவிடுகின்றனர். அதற்கிணங்க மேற்படி சலுகை அட்டைகளூடாக ச.தொ.ச மூலம் பெற்றுக் கொள்ளும் உணவுப் பொருட்களுக்கு இந்த விசேட கழிவுகள் வழங்கப்படும். அதன் மூலம் திறைசேரிக்கும் இலாபம் கிட்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 08/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை