கடமையில் தவறிய பொலிஸாரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்

ஏப்.21 தாக்குதல்: புலனாய்வு தகவல்களை ஒருங்கிணைப்பதில் குறைபாடு

பலமான புலனாய்வுக் கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும்

பாராளுமன்றத் தெரிவுக்குழு முன் நீதியரசர் விஜித ஏ.மலல்கொட சாட்சியம்

பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படலாமென ஏப்ரல் 20ஆம் திகதியே உறுதிப்படுத்தப்பட்ட புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தும் அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காது பொலிஸார் பலவீனமான முறையில் செயற்பட்டிருப்பதாக ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதல் குறித்த ஜனாதிபதி விசாரணைக் குழுவின் தலைவர் நீதியரசர் விஜித.கே.மலல்கொட தெரிவித்தார்.

புலனாய்வுத் தகவல்கள் சரியான முறையில் பகிர்ந்துகொள்ளப்படாததுடன், பொலிஸில் உயர்மட்டத்திலிருந்து, பொலிஸ் நிலையங்கள் வரையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையென்றும் குறிப்பிட்டார்.

பலமான தனியொரு புலனாய்வுக் கட்டமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டுமென்ற பரிந்துரையை வந்திருப்பதாகவும் கூறினார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் நேற்றையதினம் சாட்சியமளிக்கும்போதே அவர் இதனைக் கூறினார்.

ஜனாதிபதி விசாரணைக் குழுவினர் நேற்றையதினம் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டனர். நீதியரசருடன், குழுவின் உறுப்பினர்களான

என்.கே.இலங்கக்கோன் மற்றும் பத்மசிறி ஜயம்மான ஆகியோரும் சாட்சியமளித்தனர். உச்சநீதிமன்ற நீதியரசராகவிருக்கின்றபோதும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் என்ற ரீதியிலேயே தான் சாட்சியமளிப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

குண்டுத் தாக்குதல்கள் நடைபெறுவதற்கு முன்னர் சுமார் 16 மணித்தியாலங்களுக்கு முன்னர் தாக்குதல்கள் பற்றி உறுதியான புலனாய்வுத் தகவல்கள் பொலிஸாரிடம் இருந்துள்ளன. எனினும், இதனைத் தடுப்பதற்கு அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. தமது கடமையை சரியாகச் செய்யாத பொலிஸ் அதிகாரிகள் குறித்து அமைச்சின் ஊடாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற பரிந்துரையை தமது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாகவும் மலர்கொட சுட்டிக்காட்டினார்.

அதுமாத்திரமன்றி அடிப்படைவாத கொள்கையுடன் இருப்பவர்களுக்குப் புனர்வாழ்வளிப்பதற்கான பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் தமது அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். குண்டுத்தாக்குதல்களுக்கு யூரியா நைட்ரேட் என்ற வெடிபொருளே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவே அமெரிக்க வர்த்தக மையக்கட்டடத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்டிருந்ததுடன், ஐ.எஸ் அமைப்பினரால் பல இடங்களில் இது பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான வெடிபொருட்களை கட்டுப்படுத்த சட்டரீதியான ஏற்பாடுகள் பற்றிய பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளோம் என்றார்.

அதேநேரம், பொலிஸ் திணைக்களத்தில் மேற்கொள்ளவேண்டிய மறுசீரமைப்புக்கள் பற்றியும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருப்பதாகக் சுட்டிக்காட்டிய முன்னாள் பொலிஸ் மாஅதிபரும், ஜனாதிபதி விசாரணைக் குழுவின் உறுப்பினருமான என்.கே.இலங்கக்கோன், பொலிஸ் உயர் பதவிகளுக்கு நியமிக்கும் நபர்கள் தனிப்பட்ட ரீதியில் நோக்கப்படாது பொறுப்பை சரியாக நிறைவேற்றக்கூடிய வினைத்திறன் மிக்கவர்களாக இருக்கின்றார்களா என்பது நோக்கப்பட வேண்டும் என்பதை பரிந்துரையாக முன்வைத்திருப்பதாகவும் கூறினார்.

புலனாய்வுத் தகவல்களை இணைப்பதில் குறைபாடு இருப்பதாகவே நாம் கருதுகின்றோம். எனவேதான் சட்டரீதியான பாதுகாப்புடன் கூடிய பலமான புலனாய்வுப் பிரிவொன்று அமைக்கப்பட வேண்டும். இதற்குத் தேவையான புலனாய்வுத் தகவல்கள் திரட்டுவது மற்றும் அவற்றை ஏனைய சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் பகிர்ந்துகொள்ளும் வகையில் புலனாய்வுப் பிரிவொன்று இருக்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளோம் என்றும் தெரிவித்தார்.

நீதித்துறையின் சுயாதீனத்தன்மை

பாதிக்கப்படாதிருப்பதை

தெரிவுக்குழு உறுதிப்படுத்த

வேண்டும்

நீதித்துறையின் சுயாதீனத்தன்மை பாதிக்கப்படாதிருப்பதை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பாராளுமன்றத் தெரிவுக்குழு உறுதிப்படுத்த வேண்டுமென்றும் உச்சநீதிமன்ற நீதியரசர் விஜித்.கே.மலல்கொட வலியுறுத்தினார்.

உச்சநீதிமன்றத்தின் நீதியரசர் என்ற ரீதியில் அன்றி, ஜனாதிபதி விசாரணைக் குழுவின் தலைவர் என்ற ரீதியிலேயே தான் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், இதனால் நீதித்துறையின் சுயாதீனத்தன்மைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.

தேசிய பாதுகாப்புக்கு அவசியமானது என்பதாலேயே ஜனாதிபதி விசாரணைக் குழுவுக்கான நியமனத்தை ஏற்றுக் கொண்டோம். உச்சநீதிமன்ற நீதியரசராகவும் நான் இருப்பதால் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் சாட்சியமளிப்பது குறித்து பிரதம நீதியரசரிடமும் தான் அனுமதி பெற்றிருந்ததாகக் கூறினார்.

விசாரணைக் குழுவின் தலைவர் என்ற அடிப்படையில் தான் சாட்சியளிப்பது நீதித்துறையின் சுயாதீன செயற்பாட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையக்கூடாது. இதனை பாராளுமன்றத் தெரிவுக்குழு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இல்லாவிட்டால், ஓரிடத்தில் நடத்தப்பட்ட விசாரணை மற்றுமொரு இடத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுமாயின் எதிர்காலத்தில் இவ்வாறான விசாரணைக் குழுக்களில் பங்கெடுப்பதற்கு நீதியரசர்களோ நீதிபதிகளோ முன்வரமாட்டார்கள் என்றும் நீதியரசர் விஜித்.கே.மலல்கொட மேலும் சுட்டிக்காட்டினார்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

Wed, 08/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை