நிஸ்ஸங்க, பாலித்தவுக்கு பிடியாணை

எவன்கார்ட் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை வழக்கு;

நீதிமன்ற வழக்குக்கு சமுகமளிக்கத் தவறியமையால் ‘எவன்கார்ட்’ ஆயுதக் களஞ்சியசாலையின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் ஓய்வுநிலை மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ ஆகியோரை கைதுசெய்யுமாறு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் நேற்று பிடியாணை பிறப்பித்தார்.

‘எவன்கார்ட்’ மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலை விவகாரமாக அதன் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் ஓய்வுநிலை மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ ஆகிய இருவர் மீதும் 35.5 மில்லியன் ரூபா இலஞ்ச குற்றச்சாட்டை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்வைத்துள்ளது.

இது தொடர்பான வழக்கு நேற்று கொழும்பு மேல்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குற்றம் சுமத்தப்பட்டுள்ள இருவரும் நீதிமன்றத்துக்கு சமுகமளிக்காமையினால் அவர்களை கைது செய்யுமாறு நீதிபதி பிடியாணை பிறப்பித்தார்.

இந்த வழக்கில் ‘எவன்கார்ட்’ தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி  காமினி மாரப்பன தனது தரப்பு வாதி சுகயீனம் காரணமாக சிங்கப்பூர் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைப் பெற்று வருவதாக கூறினார். அதேநேரம் பாலித்த பெர்ணான்டோ வேறொரு வழக்கின் காரணமாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் நீதிபதியிடம் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் சட்டத்தரணியால் முன்வைக்கப்பட்ட காரணிகளை நிரூபிக்கும் வகையிலான எந்தவொரு ஆவணங்களையும் சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லையென்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.

இதேவேளை ஓகஸ்ட் 07 ஆம் திகதியன்று மேற்படி சந்தேக நபர்களை மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் அவர்களுக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மேற்படி சந்தேக நபர்கள் இருவருக்கும் எதிராக இலஞ்ச ஆணைக்குழு சட்டத்தின் 17,19, 21 மற்றும் 25 ஆகிய சரத்துக்களுக்கமைய 47 குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

2012 தொடக்கம் 2014 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ‘எவன்கார்ட்’ தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோவுக்கு 35.5 மில்லியன் ரூபாவை இலஞ்சமாக வழங்கியதாக இலஞ்ச உழல் ஆணைக்குழு இவர்கள் இருவர் மீதும் குற்றச்சாட்டியுள்ளது.

 

 

Sat, 08/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை