ஈரானுடனான பேச்சுக்கு வலியுறுத்தும் அமெரிக்கா

வளைகுடா பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க பேச்சுவார்த்தைக்குத் தயாராகுமாறு ஈரானை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் மார்க் எஸ்பர் கூறும்போது, “ஈரானுடன் மோதலை நாங்கள் என்றுமே விரும்பவில்லை. நாங்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையைத் தீர்க்கவே முயல்கிறோம். ஜனாதிபதி டிரம்ப் ஈரான் ஜனாதிபதியைச் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

வளைகுடா பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க, ஈரான் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக வேண்டும். இதற்கு ஈரான் ஒப்புக்கொள்ளும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

ஈரான் மீது பொருளாதார ரீதியாக அமெரிக்கா அழுத்தத்தை அளித்து வரும் நிலையில் அதன் பிராந்தியத்தில் தனது படையை அதிகரித்து வருவதால் வளைகுடா பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

அணு ஆயுத சோதனை தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மோதல் வலுத்து வரும் நிலையில், சவூதி அரேபியாவுக்குச் சொந்தமான எண்ணெய்க் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் என அமெரிக்கா குற்றம் சாட்டியது.

இவ்வாறு தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வந்த நிலையில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக ஈரான் மீதும் அதன் முதன்மைத் தலைவர்கள் மீதும் புதிய பொருளாதாரத் தடையை டிரம்ப் அறிவித்தார்.

அமெரிக்காவின் பொருளாதாரத் தடை காரணமாக ஈரானின் பொருளாதாரம் பெருமளவு பாதிப்புக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அமெரிக்கா, ஈரானை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது.

இது தொடர்பாக அண்மையில் நடந்த ஜி7 மாநாட்டிலும் டிரம்ப் பேசியமை குறிப்பிடத்தக்கது.

Fri, 08/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை