சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளை மதிக்கும் தலைமைக்கே முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு

சிறுபான்மைச் சமூகத்தினது உரிமைகளை மதித்து செயற்படுகின்ற தலைமைக்கே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆதரவினை வழங்கவுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பத்தமாரிப் பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் (25) இடம்பெற்ற வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், நாட்டில் தற்போது தேர்தலுக்கான முன்னெடுப்புக்கள் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன. இச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதித் தேர்தலொன்று நடைபெறுமாக இருந்தால் அதற்காக எமது கட்சி யாரை ஆதரிப்பது என கட்சியின் தலைமையுடன் நாம் இணைந்து சிந்தித்து வருகின்றோம். எமது சமூகத்தினை எவ்வித இடைஞ்சலுமின்றி வாழக்கூடிய முறையிலும், சிறுபான்மைச் சமூகத்தினை பாதுகாக்கக் கூடியதுமான நாட்டின் தலைமையை தெரிவு செய்வதே எமது கட்சியின் இலக்காக உள்ளது.

எமது கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் இணைந்து கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து முக்கியஸ்தர்களையும் ஒன்றிணைத்து நாம் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றோம்.

கடந்த காலத்தில் ஆட்சி செய்த மஹிந்த ராஜபக்ஷ எமது சமூகத்தினை பாதுகாக்கத் தவறிவிட்டார் என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் இருந்து கொண்டிருக்கின்றது. அதுமாத்திரமல்லாமல் இந்த ஆட்சியில்கூட நமது முஸ்லிம் சமூக்திற்கு பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டிருக்கின்றன. குறிப்பாக எமது அம்பாறை நகரில் உள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்டபோது அதனை பார்க்கக்கூட எமது நாட்டின் ஜனாதிபதியோ பிரதமரோ அவ்விடத்திற்கு உடனடியாக விஜயம் செய்யவில்லை. ஆட்சியாளர்கள் எமது முஸ்லிம் சமூகத்தின் மீது கவனம் கொள்ளவில்லை என்ற பல்வேறு விடயங்கள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் ஆராய்ந்த பின்பே நாம் தீர்க்கமான முடிவொன்றை எடுக்கவுள்ளோம்.

எமது கட்சி சமூகத்திற்கு அநீதி இழைக்கப்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்காது என்றார்.

இந்நிகழ்வின்போது கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், பிரதேச செயலாளர்களான ஜே.லியாக்கத் அலி, எஸ்.எல்.எம்.ஹனீபா உள்ளிட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் துறைசார் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

(அட்டாளைச்சேனை தினகரன் நிருபர்)

Tue, 08/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை