நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமானால் இலங்கையர் என கைகோர்க்க வேண்டும்

களனி பல்கலைக்கழக பீடாதிபதி

ஒலுவில் விசேட நிருபர்

நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமானால் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் எல்லோரும் இலங்கையர் என கைகோர்க்க வேண்டுமென களனிப் பல்கலைக்கழக சமூக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி ஷந்தன அபேயரத்ன தெரிவித்தார்.

தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச அமைப்பின் ஒன்றுகூடல் அண்மையில் அக்கரைப்பற்று மெங்கோ காடன் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக பீடாதிபதி கலாநிதி யூ.எல். செயினுடீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இழுபறி காரணமாக நாடு அழிவுப் பாதைக்குச் செல்கின்றது. இந்த அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.

இதுகாலவரைக்கும் நாங்கள் வாக்களித்து அரசாங்கத்தை தாபித்துள்ளோம். இனிவரும் காலங்களில் நாங்கள் நாட்டின் பிரஜைகள் என்ற அடிப்படையில் செயற்பட வேண்டும்.

நாட்டில் வாழும் சகல மக்களினதும் கருத்துக்களைப் பெற்று புத்திஜீவிகள் அமைப்பை நாட்டின் நலன்கருதி ஏற்படுத்தியுள்ளோம். இதில் இணைந்து கொள்ளுமாறு அரசியல் கட்சிகள் உட்பட சகல தொழிற்சங்கங்களுக்கும் தொழில்வல்லுனர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம்.

சமூக மாற்றத்தை காண வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதால் முதலில் அரசியல் மாற்றத்தை கொண்டுவர வேண்டும். இப்போது மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்பியுள்ளார்கள். நாங்கள் எதிர்வருகின்ற எந்தத் தேர்தலாக இருந்தாலும் அபேச்சர்களை நிறுத்தவுள்ளோம்.

இனவாதம், மதவாதம் நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும். இதனை நாம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாதென்றார்.

இந் நிகழ்வில் களனிப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் எஸ்.ஜே. யோகராசா, களனிப் பல்கலைக்கழகத்தின் கிறிஸ்தவ கலாசாரம் தொடர்பான ஆய்வுப் பிரிவின் சிரேஸ்ட விரிவுரையாளர் விஜித் ரோஹன, சட்டத்தரணி உபுல் குமரப்பெரும ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

Thu, 08/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை