எனது வெற்றியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸ போட்டியிடுவதையும் வெற்றிபெறுவதையும் எந்த அரசியல் கட்சிகளோ அல்லது அரசியல் ஜாம்பவான்களினாலோ தடுத்துநிறுத்த முடியாது என அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

நேற்று மாத்தளைத் தேர்தல் தொகுதியின் ஈலியகொல்லையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஸ்ரீமத் அலிக் அலுவிஹாரே வீட்டுத்திட்டத்தை பயனாளிகளுக்குக் கையளிக்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்:

ஜனாதிபதித் தேர்தல் பற்றி நாட்டில் இன்று பரவலாக பேசப்படுகின்றது. கடந்த 18ஆம் திகதி

காலிமுகத்திடலில் இடம்பெற்ற ஜே. வி. பி யின் கூட்டத்தில் அதன் தலைவர் அநுர குமாரதிஸாநாயக்க ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டார். கடந்த 11ம் திகதி பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் அறிவிக்கப்பட்டது. ஸ்ரீ. ல. சு. க. யிலும், ஐ. தே. கவிலும் இன்னும் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

ஆனால்! ஜனாதிபதித்தேர்தலில் ஐ. தே. கட்சியில் எனது பெயரை முன்வைத்தாலும், முன் வைக்காவிட்டாலும் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவார் என்பதை ஆணித்தரமாக கூறிவைக்க விரும்புகிறேன்.

இப்போது பெயர் வெளியிடப்பட்டுள்ள இரண்டு ஜனாதிபதி வேட்பாளர்களையும் பற்றி நான் ஒருபோதும் அலட்டிக்கொள்வதில்லை. ஏனென்றால் அவர்கள் இருவரும் தோல்வியின் படுகுழியில் மக்களால் தள்ளப்படுவார்கள். நாடும், நாட்டு மக்களும் எதிர்பார்ப்பது கைகளில் இரத்தக் கறை படியாத, நாட்டு மக்களின் சொத்துக்களை சூறையாடாத, நாட்டு மக்களுக்கு ஆபத்து என்று ஏற்படும்போது நாட்டு மக்களை தவிக்கவிட்டு கடல்கடந்து ஓடி மறைந்து விடாதவர்களையே. இன்பத்திலும் துன்பத்திலும் இரண்டரக் கலந்து நாட்டு மக்களுடன் இணைந்து ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசமின்றி பழகக்கூடிய ஒரு அரசியல் தலைமைத்துவத்தையே இன்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். நான் வீரம் பேசி மக்களை ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடாத்துபவன் அல்ல.

மக்கள் எனக்குத் தந்த மகத்தான பொறுப்புகள் மூலம் மக்களின் தேவைக்கேற்ற சேவைகளை புரிந்து அவர்களின் ஆசீர்வாதத்துடனேயே நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளேன். எனது வெற்றியைத் தடுக்க நாட்டில் எந்த அரசியல் கட்சிகளாலோ, அல்லது எந்தவொரு அரசியல் ஜாம்பவான்களினாலோ முடியாது எனவும் சஜித் பிரேமதாஸ மேலும் கூறினார்.

 

உக்குவளை விஷேட நிருபர்

Tue, 08/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை