தடையை நீக்கக்கோரிய சட்ட மாஅதிபரின் மனு மீது சுமார் 4 மணி நேரம் கடும் வாதம்

ஒக்.07 வரை ஒத்திவைப்பு

திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று ஆலயத்தில் விகாரை கட்டுவதற்கும், டிக்கட் விற்பனை செய்வதற்கும் மேல் நீதிமன்றத்தால் ஏற்கனவே வழங்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவை அவரசமாக நீக்க வேண்டும் என்ற சட்டமா அதிபரின் விண்ணப்பத்துக்கான உத்தரவு எதிர்வரும் ஒக்டோபர் 07ஆம் திகதி வழங்கப்படும் என திருகோணமலை மேல் நீதிமன்றம் அறிவித்தது.

இவ் வழக்கானது நேற்றைய தினம் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே நீதிபதி இதனை அறிவித்தார்.

வழக்கு விசாரணையில் மனுதாரர் சார்பில் சட்டத்தரணிகளான பிரசாந்தினி உதயகுமார், கே. துரைராஜசிங்கம் மற்றும் கே.சயந்தன் ஆகியோருடன் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆஜராகினார். எதிர் மனுதாரர் சார்பில் அரச சட்டவாதி சாருக்க ஏக்கநாயக்க மற்றும் பிரிந்தா குணரத்னம் ஆகியோருடன் சட்ட மாஅதிபர் திணைக்கள சிரேஷ்ட பிரதி சொலிசிட்ட ஜெனரல் விகும் டி ஆப்று, ஆஜராகினர்.

வழக்கு விசாரணையில் வாதப்பிரதிவாதங்கள் தொடர்ச்சியாக சுமார் நான்கு மணித்தியாலங்களுக்கும் மேல் நடைபெற்றது.

இதில் இவ் வழக்கு வேண்டுமென்றே தமிழ் மொழியில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் இவ் வழக்கின் கோவைகளை மொழிபெயர்ப்பதில் சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு காலம் தேவையாக இருந்தது. அதனாலேயே தாமதமாக சட்ட மா அதிபர் இவ் வழக்கில் முன்னிலையாகினார் என பிரதி சொலிஸ்ட்ட ஜெனரல் குறிப்பிட்டார்.

இதற்கு கடுமையான ஆட்சேபனை தெரிவித்த மனுதாரர் தரப்பு சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், இது தமிழ் நீதிமன்றம், இங்கு தமிழில் வழக்கு நடத்த உரிமையுண்டு என சுட்டிக்காட்டினார். இதனையடுத்து தாம் கூறியது தொடர்பாக பிரதி சொலிஸ்ட்ட ஜெனரல் கவலையை தெரிவித்தார்.

தொடர்ந்து இடம்பெற்ற விவாதத்தில் பிரதி சொலிஸ்ட்ட ஜெனரல், இவ் வழக்கு தொடர்பாக ஏற்கனவே வழங்கப்பட்ட இடைக் கால தடையுத்தரவுகளான விகாரை கட்டுவதற்கு தடை, ரிக்கெற் விற்பதற்கு தடை, காணிக்குள் நுழைவதற்கு வழங்கப்பட்ட அனுமதி ஆகியவற்றை அவசரமாக நீக்க வேண்டுமென வாதிட்டார்.

குறிப்பாக பிள்ளையார் மேடு காணப்படும் இடத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே அங்கு தாது கோபுரம் காணப்பட்டது. தற்போது அதில் மீண்டும் தாதுகோபுரம் அமைக்கப்படவுள்ளது. எனவே உடனடியாக அத்தடையுத்தரவு நீக்கப்படவேண்டும் என வாதிட்டார்.

இது தொடர்பில் கடுமையான ஆட்சேபனை தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் குறித்த பிள்ளையார் மேட்டில் கடந்த 150 ஆண்டுகளாக பிள்ளையார் சிலை காணப்பட்டது. அதற்கு 12 வருடங்களுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்யப்படுவது வழமை. அவ்வாறு இம் முறையும் கும்பாபிஷேகம் செய்ய முயற்சித்த போதே தொல்பொருட் திணைக்களம் இதில் தலையிட்டு தமது பிரதேசம் என குறிப்பிட்டது என குறிப்பிட்டார்.

தொடர்ந்து வாதிட்ட பிரதி சொலிஸ்ட்ட ஜெனரல்,

இடைக்கால தடையுத்தரவு அவசரமாக நீக்கப்பட வேண்டும். எனெனில் 10 ஆம் மாதத்துக்கு பின்னர் திருகோணமலையில் மழை பெய்யும். அவ்வாறு மழை பெய்தால் கட்டுமான பணிகளை செய்ய முடியாது.

அதேபோன்று இது வரை காலமும் ரிக்கட் விற்பனையால் கிடைத்த வருமானம் திறைசேரிக்கு சென்றது. ஆனால் தற்போது நீதிமன்ற தடையுத்தரவால் திறைசேரிக்கு கிடைத்த வருமானம் இழக்கப்பட்டுள்ளது. எனவே அவசர உத்தரவாக இடைக்கால தடையுத்தரவு நீக்கப்பட வேண்டும் என குறிபிட்டார்.

இது தொடர்பாக மிக கடுமையான ஆட்சேபனை தெரிவித்த சட்டத்தரணி சுமந்திரன், தற்போது சட்ட மாஅதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட ஆட்சேபனை மனுவின் மூலமாக ஏற்கனவே வழங்கப்பட்ட தடையுத்தரவை நீக்குமாறு கோரமுடியாது.

அவ்வாறு நீக்குமாறு கோர வேண்டுமாக இருந்தால் சட்டமா அதிபர் ஓர் மனுவையும் சத்தியக்கடதாசியையும் இணைத்து அதன் மூலமே தடையுத்தரவை நீக்குமாறு கோரலாம். ஆனால் இன்று தாக்கல் செய்யப்பட்ட மனு அவ்வாறு கோரப்படவில்லை.

எனவே இம் மனு மூலமாக ஏற்கனவே வழங்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவை நீக்குமாறு கோரமுடியாது என சட்டப் பிரிவுகளை சுட்டிக்காட்டி சட்டத்தரணி சுமந்திரன் வாதிட்டார்.

மிக நீண்ட நேரம் இடம்பெற்ற இரு தரப்பு வாதங்களை ஆராய்ந்த மன்றானது இவ் சட்டமா அதிபரது ஆட்சேபனை தொடர்பான எழுத்துமூல சமர்ப்பணத்தை எதிர்வரும் செப்டம்பர் 23ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டும்.

அதேபோன்று இவ் ஆட்சேபனைக்கு எதிரான மாற்று சத்தியக்கடதாசியையும் ஆட்சேபனையும் எதிர்வரும் செப்டம்பர் 12ஆம் திகதிக்கு முன்னர் மனுதாரர் தரப்பு சட்டத்தரணி நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் சட்டமா அதிபர் கோரிய அவசர இடைக்கால தடையுத்தரவை நீக்கி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற வாதம் தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றால் பிறப்பிக்கப்பட்ட விகாரை கட்டுவதற்கு தடை, ரிக்கட் விற்பதற்கு தடை, பிள்ளையார் ஆலய நிர்வாகம் காணிக்குள் செல்வதற்கு அனுமதி ஆகிய இடைக்கால உத்தரவுகளை தொடர்ந்து அமுல்படுத்துவதா அல்லது அதனை நீக்குவதா என்ற கட்டளையை ஒக்டோபர் 07ஆம் திகதி வழங்கப்படும் எனவும் நீதிபதி இளஞ்செழியன் அறிவித்தார்.

அக் கட்டளையின் பின்னர், இவ் வழக்கினை விசாரணை செய்வதற்கு இந் நீதிமன்றுக்கு நியாயாதிக்கம் உள்ளதா இல்லையா ?என்பது தொடர்பாக ஆராயும் முழுமையான ஆட்சேபனை மனுவினை தாக்கல் செய்ய அனுமதிக்க ​வேண்டும் என்ற சட்ட மாஅதிபரது விண்ணப்பத்திற்கு, அதன் உரிமையை தக்க வைத்து நீதிபதி அனுமதியளித்து உத்தரவிட்டார்.

இதேவேளை நேற்றைய வழக்கு விசாரணையின் போது நீதிமன்றில் அதிகளவான பௌத்த பிக்குகள் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரி.விரூஷன், ரொட்டவெவ குறூப் நிருபர்

Fri, 08/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை