இலங்கை -நியூசிலாந்து 2 ஆவது டெஸ்ட் கொழும்பில்

சகலதுறை வீரர் டில்ருவான் பெரேரா சேர்ப்பு

இலங்கை - – நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (22) கொழும்பு பி. சரா ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.

இலங்கை அணியின் அனுபவ சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரர் டில்ருவான் பெரேரா, நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றது.

இந்த நிலையில், இரண்டாவது போட்டிக்கான அணியில் இலங்கை டெஸ்ட் அணியின் முன்னணி சகலதுறை வீரரான டில்ருவான் பெரேரா இணைக்கப்பட்டுள்ளார் .

டில்ருவான் பெரேரா இலங்கை அணிக்காக 38 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன் 153 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில், தென்னாபிரிக்காவுக்கு எதிராக இலங்கையில் நடைபெற்ற தொடரில் இவரின் பந்துவீச்சு அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது, ஐசிசி விதிமுறைக்கு மாறாக பந்துவீசிய குற்றச்சாட்டுக்கு முகங்கொடுத்துள்ள அகில தனஞ்சய எதிர்வரும் 28ம் திகதி இந்தியாவின் சென்னைக்கு பயணிக்கவுள்ளதுடன், அங்கு பந்துவீச்சு பரிசோதனைக்கு முகங்கொடுக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில தனஞ்சய நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், மொத்தமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அகில தனஞ்சய இரண்டாவது போட்டியில் விளையாடுவதற்கு ஐசிசி அனுமதி வழங்கியிருக்கும் போதும், அவர் இரண்டாவது போட்டியில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அகில தனஞ்சயவின் இடத்துக்கு டில்ருவான் பெரேரா இணைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணி இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

Thu, 08/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை