அப்பாவி முஸ்லிம்களுக்கு தீர்வு கிட்டும் வரை அமைச்சு பொறுப்புகளை மீள எடுப்பதில்லை

சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம்களின் விடுதலை தொடர்பான தீர்வு கிட்டும் வரை அமைச்சுப் பொறுப்புக்களை மீள எடுப்பது தொடர்பில், இறுதித் தீர்மானம் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.

ஏறாவூரில் கம்பெரலிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நேற்றுமுன்தினம் (21) அங்குரார்ப்பனம் செய்து வைத்து உரையாற்றுகையிலே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஏப்ரல் 21 தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பிற்பாடு முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட பிரச்சினைகளை அடுத்து அரசில் அங்கம் வகித்த அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் தங்களது பதவிகளை ஒன்றுபட்டு இராஜினாமா செய்து ஒரு பெரும் அதிர்ச்சியை வழங்கியதை அடுத்து நாட்டின் தலைவர்களும் , மத தலைவர்களும், சர்வதேச நாடுகளும் மீண்டும் அமைச்சுக்களை பொறுப்பேற்குமாறு முன்னெடுக்குமாறு வலியுறுத்துகிறார்கள்.

நாம் இராஜினாமா செய்த போது அரசிடம் முன்வைத்த கோரிக்கைகளில் சில நிறைவேற்றப்பட்டாலும், இன்னும் அரைகுறையாக பல விடயங்கள் உள்ளன.

அண்மையில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடனான சந்திப்பின் போது மீண்டும் பதவிகளை ஏற்பது தொடர்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட போது " அநியாயமாக கைது செய்யப்பட்ட சிலர் இன்னும் சிறைகளில் வாடுகின்றார்கள், இவர்களை விடுவிப்பதில் தடையாக உள்ள பின்னணி காரணங்கள், தவறுகள் என்பன பற்றி தெளிவுபடுத்தியதோடு முஸ்லிம்களது உரிமைகள், பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு நீதி சரியாக நிலை நாட்டப்படுகின்ற போதுதான் நாங்கள் எந்தளவிற்கு அரசுடன் இணைந்து அமைச்சு பதவிகளை மீண்டும் பெறுவது பற்றி யோசிக்க முடியும் என்பதை அவர்களுக்கு எடுத்துக் கூறி உள்ளோம்.

ஆயிரம் ஆண்டுகள் வரலாற்றை கொண்ட இலங்கை முஸ்லிம்களது உரிமைகளை பாதுகாப்பதற்காக , மத அனுஷ்டானங்களை சுதந்திரமாக மேற்கொள்வதற்காக இந்த நாட்டின் ஒவ்வொரு சமூகத்தினருக்குமான உத்தரவாதத்தை அரசியலமைப்பு வழங்குகிறது, அதுதான் எமது நாட்டின் ஒரே சட்டமாகவும் சொல்லப்படுகின்றது.அந்த சட்டத்தின் பிரகாரம் எமது கலாசாரத்தை பேணவும் உரிமைகளை பாதுகாக்கவும், மத அனுஷ்டானங்களை முன்னெடுக்கவும் உரிமை உள்ளது.

நாடு ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது, சிலர் குழப்பங்களை விளைவிக்க திட்டம் தீட்டலாம், தாங்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தால் இவ்வாறான நிலைமைகள் ஏற்படாது எனும் தோற்றப்பாட்டினை உருவாக்குவதற்கான அரசியல் சூழ்ச்சிகளும் இடம்பெறலாம்.

ஆகவே அனைத்து மக்களும் இது தொடர்பில் மிக அவதானமாகவும் , விழிப்புடனும் செயலாற்றிட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

(வெல்லாவெளி தினகரன் நிருபர்)

 

Tue, 07/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை