மேற்கிந்திய தீவை வீழ்த்திய இலங்கை அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது

இலங்கை -மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் (01) நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் அவிஷ்க பெர்னாண்டோவின் கன்னி சதம் மற்றும் மாலிங்கவின் சிறந்த பந்துவீச்சு ஆகியவற்றுடன் இலங்கை 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.

இலங்கை அணி நிர்ணயித்திருந்த 339 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி ஆரம்பத்தில் நிக்கோலஸ் பூரனின் வேகமான ஓட்டக்குவிப்பு மற்றும் பெபியன் அலனின் வேகமான அரைச்சதம் என்பவற்றின் ஊடாக ஓட்டங்களை குவித்திருந்தாலும் இறுதியில் 315 ஓட்டங்களை பெற்று, 23 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

டர்ஹாம் – ரிவர்சைட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இலங்கை அணிக்கு வழங்கியது. இதன்படி களமிறங்கிய இலங்கை அணி அவிஷ்க பெர்னாண்டோவின் சதம் மற்றும் குசல் பெரேரா, லஹிரு திரிமான்ன ஆகியோரின் சிறந்த துடுப்பாட்டங்களின் உதவியுடன் மேற்கிந்திய தீவுகளுக்கு சவாலான வெற்றி இலக்கினை நிர்ணயித்தது.

இப் போட்டியை பொறுத்தவரை இலங்கை அணியில் மூன்று மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. சுரங்க லக்மாலுக்கு பதிலாக கசுன் ராஜிதவும், ஜீவன் மெண்டிஸிற்கு பதிலாக ஜெப்ரி வெண்டர்சே மற்றும் திசர பெரேராவுக்கு பதிலாக லஹிரு திரிமான்ன ஆகியோர் அழைக்கப்பட்டனர்.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய குசல் பெரேரா மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக அரைச்சத இணைப்பாட்டத்தை பெற்றுக்கொடுத்தனர். இருவரும் 93 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்தபோது, திமுத் கருணாரத்ன 32 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான குசல் பெரேரா தனது 14 ஆவது ஒருநாள் அரைச்சதத்தை கடக்க, இளம் துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ சிறந்த இணைப்பாட்டத்தை வழங்கினார். ஒருபக்கம் அவிஷ்க பெர்னாண்டோ சிறப்பாக துடுப்பெடுத்தாட மறுமுனையில் குசல் பெரேரா 64 ஓட்டங்களை பெற்று, துரதிஷ்டவசமாக ரன்-அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

குசல் பெரேராவின் ஆட்டமிழப்பின் பின்னரும் அவிஷ்க பெர்னாண்டோ சிறந்த துடுப்பாட்ட யுத்திகளுடன் ஓட்டங்களை குவிக்க, மறுமுனையில் களமிறங்கிய குசல் மெண்டிஸ் மற்றும் அஞ்சலோ மெத்திவ்ஸ் ஆகியோர் சிறப்பான இணைப்பாட்டத்தைப் பெற்று தங்களுடைய பங்கிற்கு ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.

குசல் மெண்டிஸ் 39 ஓட்டங்களையும், அஞ்சலோ மெத்திவ்ஸ் 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். ஆனால், இளம் வீரராக இருந்தாலும் தனது இன்னிங்ஸை அற்புதமாக நகர்த்திய அவிஷ்க பெர்னாண்டோ தனது முதல் ஒருநாள் சதத்தை பதிவுசெய்ததுடன், இலங்கை அணி சார்பாக இந்த உலகக் கிண்ணத்திலும் முதல் சதத்தையும் கடந்தார்.

உலகக் கிண்ண வரலாற்றில் இளம் வயதில் (21 வருடம் 87 நாட்கள்) சதம் கடந்த மூன்றாவது வீரர் என்ற சாதனையை அவிஷ்க பெர்னாண்டோ படைத்தார். இதற்கு முதல் இடங்களை முறையே அயர்லாந்து அணியின் போல் ஸ்ட்ரெலிங் (20 வருடம் 132 நாட்கள்) மற்றும் அவுஸ்திரேலிய அணியின் ரிக்கி பொன்டிங் (21 வருடம் 74 நாட்கள்) ஆகியோர் பிடித்துள்ளனர்.

அவிஷ்க பெர்னாண்டோவின் சாதனை சதம் (104 ஓட்டங்கள்) மற்றும் மத்திய வரிசையில் களமிறங்கிய லஹிரு திரிமான்னவின் 45 ஓட்டங்களின் உதவியுடன் இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 338 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில் ஜேசன் ஹோல்டர் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் பின்னர் சவாலான வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி நிக்கோலஸ் பூரன் மற்றும் இறுதியாக வருகைதந்த பெபியன் எலன் ஆகியோரின் சிறந்த துடுப்பாட்டங்களின் ஊடாக வெற்றி இலக்கை நெருங்கிய போதும், 315 ஓட்டங்களை பெற்று, 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

எதிரணிக்கு சவால் மிக்க வெற்றி இலக்கை நிர்ணயித்த இலங்கை அணி ஆரம்பத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பந்துவீசியது. குறிப்பாக லசித் மாலிங்க மேற்கிந்திய தீவுகள் அணியின் சுனில் அம்ப்ரிஸ் மற்றும் சாய் ஹோப் ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்ய மேற்கிந்திய தீவுகள் அணி 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.

இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஷிம்ரொன் ஹெட்மையர் மற்றும் கிரிஸ் கெயில் இணைப்பாட்டமொன்றை கட்டியெழுப்பினர். ஆனாலும், தனது கன்னி உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடிய கசுன் ராஜித, கிரிஸ் கெயிலின் விக்கெட்டினை கைப்பற்ற, குறுகிய இடைவெளியில் தனஞ்சய டி சில்வா அற்புதமான களத்தடுப்பின் மூலம் ஷிம்ரொன் ஹெட்மையரை ரன்-அவுட் மூலம் ஆட்டமிழக்கச்செய்தார்.

மேற்கிந்திய தீவுகள் அணி 84 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த போதும், அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர் மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகியோர் மற்றுமொரு இணைப்பாட்டத்தை கட்டியெழுப்ப தொடங்கினர். இவர்கள் இருவரும் 61 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற, ஹோல்டர், ஜெப்ரி வெண்டர்சேவின் சுழலில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்ட போதும் தொடர்ந்தும் இணைப்பாட்டங்கள் பகிரப்பட்டுக் கொண்டிருந்தன. 6 ஆவது விக்கெட்டுக்காக இணைந்த நிக்கோலஸ் பூரன் மற்றும் கார்லோஸ் ப்ராத்ரவைட் ஆகியோர் மற்றுமொரு சிறந்த இணைப்பாட்டத்தை பகிர்ந்தனர். இந்த இணைப்பாட்டத்தில் நிக்கோலஸ் பூரன் அரைச்சதம் கடக்க, இலங்கை அணி நெருக்கடிக்கு முகங்கொடுத்தது.

நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை அணி பந்துவீச்சில் மாற்றங்களை ஏற்படுத்த, இசுரு உதானவின் பந்துவீச்சில் ரன்-அவுட் முறையில் ப்ராத்வைட் ஆட்டமிழந்தார். ஆனாலும் அடுத்து வந்த பெபியன் எலன், நிக்கோலஸ் பூரனுடன் இணைந்து மற்றுமொரு சிறந்த இணைப்பாட்டத்தை பகிர, இவர்கள் இருவரும் மேற்கிந்திய தீவுகள் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச்செல்லத் தொடங்கினர். துரதிஷ்டவசமாக அரைச்சதம் கடந்த எலன் 51 ஓட்டங்களுடன் ரன்-அவுட் மூலம் ஆட்டமிழக்க வெற்றி இலங்கை அணியின் பக்கம் திரும்பியது.

நிக்கோலஸ் பூரன் (118 ஓட்டங்கள்) தனது கன்னி சதத்தை கடந்து தனியாளாக போராடிய நிலையில், அஞ்செலோ மெதிவ்ஸின் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழக்க, இலங்கை அணி 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. குறிப்பாக அஞ்சலோ மெத்திவ்ஸ் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பின்னர், முதன்முறையாக சர்வதேச ஒருநாள் போட்டியொன்றில் பந்துவீசி முதல் பந்தில் விக்கெட்டை வீழ்த்தி அணியின் வெற்றியை இலகுவாக்கியிருந்தார்.

இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை அணி 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6 ஆவது இடத்துக்கு முன்னேறியிருந்தாலும், அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இலங்கை அணி தங்களுடைய அடுத்த போட்டியில் இந்திய அணியை எதிர்வரும் 6 ஆம் திகதி எதிர்கொள்ளவுள்ளதுடன், மேற்கிந்திய தீவுகள் அணி எதிர் வரும் 4ஆம் திகதி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

Wed, 07/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை