மேற்கத்தைய மருத்துவத்துறையில் இது பெரும் பிரச்சினை

மருந்துப்பொருட்கள், உபகரணங்கள் கொள்வனவில் பாரிய நிதி மோசடி

மருந்துப் பொருட்களையும் நவீன மருத்துவ உபகரணங்களையும் கொள்வனவு செய்யும்போது அதன் மூலம் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளைப் பார்க்கிலும் பெரும் நிதி மோசடிகள் இடம்பெறுவது மேலைத்தேய மருத்துவ துறையிலுள்ள பெரும் பிரச்சினையாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மன்னம்பிட்டி கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலையின் புதிய வாட்டுத் தொகுதியை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் (28) கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத்

தெரிவித்தார்.

மன்னம்பிட்டி கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலையிலிருந்து வந்த நீண்டகால குறைபாடொன்றை நிவர்த்தி செய்யும் வகையில் “எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வாட்டுத் தொகுதிக்கு 165 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

28 கட்டில்களைக் கொண்ட இவ்வாட்டுத் தொகுதி வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது.

எமது ஆயுர்வேத மற்றும் சுதேச மருத்துவ முறைமையானது பெறுமதி வாய்ந்த ஒன்றாகும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, மேலைத்தேய மருத்துவ விஞ்ஞானம் எவ்வளவு முன்னேற்றமடைந்த போதும் எமது நாட்டின் சுதேச மருத்துவ முறைமையின் பெறுமதியை மிகைக்க முடியாதிருப்பதாகவும் தெரிவித்தார். நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து புதிய வாட்டுத் தொகுதியை திறந்து வைத்த ஜனாதிபதி, அதனை பார்வையிட்டார்.

வட மத்திய மாகாண சுகாதார சுதேச மருத்துவத்துறை அமைச்சின் செயலாளர் சமன் பந்துலசேன, வட மத்திய மாகாண ஆயுர்வேத ஆணையாளர் குமார அல்விஸ், திம்புலாகலை பிரதேச சபையின் தலைவர் ஜயந்த மாறசிங்ஹ உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதேநேரம் “எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் வாழ்வாதார அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மக்களுக்கு நன்மைகளை பகிர்ந்தளிக்கும் நிகழ்வும் நேற்று முன்தினம் பொலன்னறுவை, புத்தி மண்டபத்தில் நடைபெற்றது. அறநெறிப் பாடசாலைகள், முன்பள்ளிப் பாடசாலைகளுக்கான கதிரை, மேசைகளை வழங்குதல், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள 63 வீடுகளை கையளித்தல், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடங்களில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்களுக்கான நடமாடும் விற்பனைக் கூடங்களை வழங்குதல், மீன்பிடிப் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பொலன்னறுவை நகர பிதா சானக சிதத் ரணசிங்க, பிரதேச மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட செயலாளர் பண்டுக அபேவர்த்தன உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இச் செய்தி நேற்றைய வாரமஞ்சரியில் பிரசுரம் செய்யப்பட்டிருந்தது. அதன் தலைப்பில் தவறு இடம்பெற்றுள்ளது. அதனாலேயே இச் செய்தி மீள் பிரசுரம் செய்யப்படுகிறது. அச் செய்தியில் இடம்பெற்ற தவறுக்காக வருந்துகிறோம்.

 

Mon, 07/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை