ஆட்பதிவு திணைக்கள கணனி கட்டமைப்பு திடீர் செயலிழப்பு

ஒரே நாள் சேவை இடைநிறுத்தம்; திங்களன்று நிலைமை சீராகலாம்

ஆட்பதிவு திணைக்களத்தின் கணனி கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அடையாள அட்டை வழங்கும் ஒருநாள் சேவை நேற்று திடீரென இடைநிறுத்தப்பட்டது. கணனி காப்பகத்தின் செயலிழப்பு மற்றும் அதிகளவான பாவனை என்ற காரணங்களினால் இந்த தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கலாமென ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் வியானி குணதிலக்க நேற்று தெரிவித்தார்.

இந்த திடீர் அறிவிப்பு காரணமாக நேற்று வெள்ளிக்கிழமை ஒரே நாள் சேவையூடாக அடையாள அட்டை பெறுவதற்காக பெருமளவில் வருகை தந்திருந்த மக்கள் ஏமாற்றமடைந்தனர். இதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட பெரும் அசௌகரியம் தொடர்பாக ஆணையாளர் வியானி குணதிலக்க வருத்தத்தை தெரிவித்துக்ெகாண்டார். எவ்வாறாயினும் திங்கள் முதல் நிலைமை சீராக்கப்பட்டுவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதே வேளை ஆட்பதிவு திணைக்களத்தின் இணையத்தளம் தொர்பில் விசாரணைகள் மேற்கொள்ளமாறு இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது. ஆட்பதிவு திணைக்களத்தின் ஒருநாள் சேவை நேற்று திடீரென செயலிழந்ததன் காரணமாகவே இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளது,. இணையத்தளத்துக்குரிய Backup System ஒன்று கடைப்பிடிக்கப்படாமை இதற்கான அடிப்படை காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீரென கணனிகள் கட்டமைப்பு செயலிழந்தாலும் வியாழக்கிழமை நள்ளிரவு வரை அதனை சீர் செய்வதற்கு தொழில்நுட்ப வல்லுநர்கள் முயன்றுள்ளனர். எனினும் நேற்று வெள்ளிக்கிழமை நிலைமையை வழமைக்கு கொண்டுவர முடியாமல் போனது.

எவ்வாறாயினும் செயலிழப்புக்கான பிரதான காரணிகள் கண்டறியப்பட்டுள்ளதால் திங்கட்கிழமை வழமை போன்று சேவையை தொடர முடியுமென தான் நம்புவதாகவும் ஆணையாளர் வியானி குணதிலக்க தெரிவித்தார். நிலைமை சீராவது தொடர்பில் தான் இலத்திரணியல் ஊடகங்களூடாக இன்று அல்லது நாளை பொதுமக்களுக்கு அறியத்தருவதாகவும் தெரிவித்தார்.

கே.அசோக்குமார்

 

 

Sat, 07/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை