கூட்டு எதிரணி எம்.பி ஒருவர் விரைவில் கைதாகலாம்

பிரபல பாதாள உலக கோஷ்டி தலைவர் மாகந்துரே மதூஷ் வெளிப்படுத்தியுள்ள இரகசிய தகவல்களின் பிரகாரம் கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் விரைவில் கைதுசெய்யப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ண தெரிவித்தார்.

கண்டி அஸ்கிரிய மகாநாயக்க தேரரிடம் ஆசிப்பெற்றுக் கொண்டப் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

2015ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் சுகாதார சேவைகளுக்கு அஸ்கிரிய மகாநாயக்க தேரர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். அத்துடன், சீன சிகரட்டுகள் இங்கு கொண்டுவரப்படுவதை தடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்தனர். 2019ஆம் ஆண்டில் நடைபெறும் எந்தவொரு தேர்தலுக்கும் அரசாங்கம் தயாராகவுள்ளது. நாம் செய்துள்ள பணிகளின் பிரகாரம் பாரிய வெற்றியை பெற்றுக்கொள்ள முடியும். 2015ஆம் ஆண்டு நாம் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ள போதும் மனித படுகொலைகளை செய்தவர்களுக்கு எதிராக தண்டனை வழங்குவதில் சிக்கல் நிலைகள் உள்ளன.

கூட்டு எதிர்க்கட்சி இது குறித்து சந்தோஷமடைந்தாலும், எமக்கு பெரும் துக்கமாகவுள்ளது. 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னர் பொலிஸ் திணைக்களம் ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்டத்தை தொடர்ந்து கடந்த அரசின் காலத்தில் இடம்பெற்ற மனிதப் படுகொலைகள் குறித்த விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டன.

மரண தண்டனை அமுல்படுத்தப்படுவதால் குற்றங்கள் குறையவில்லை என்பதே உலகளாவிய தரவுகள் குறிப்பிடுகின்றன. அமெரிக்க உட்பட பல நாடுகளில் மரண தண்டனை உள்ள போதும் அங்கு குற்றங்கள் குறையவில்லை. மாகந்துரே மதூஷ் வெளிப்படுத்திய இரகசிய தகவல்கள் பிரகாரம் குற்றச்சாட்டுக்கு உள்ளாகிய அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள். பல அரசியல்வாதிகள் தொடர்பில் மதுஷ் தகவல்களை வழங்கியுள்ளார். விரைவில் பாராளுமன்றத்தில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவரும் கைது செய்யப்படவுள்ளார். அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்கள் தொடர்பில் மதுஷ் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை. என்றாலும், சில சந்தர்ப்பங்களில் மதுஷூடன் சந்திப்புகளை நடத்தியுள்ளனர் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

 

Sat, 07/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை